நாடு முழுவதும் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ரேபிஸ் தாக்கத்தினால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் டெல்லி தெருநாய்களை 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு வழங்கியது. தெருநாய்களை பிடிக்கும் முந்தைய உத்தரவை தடை செய்யும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்தது.
ஆனால், கடந்த 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி:
-
தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே இடத்தில் விடலாம்.
-
ஆக்ரோஷமாகவும், ரேபிஸ் பாதிப்பில் உள்ள நாய்களை பொதுப்பகுதியில் விடக்கூடாது; அவற்றை காப்பகத்தில் தனியே வைத்திருக்க வேண்டும்.
-
நாய்களைப் பிடிக்க தடுப்போர் மீது ₹25,000 முதல் ₹2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
-
தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை; குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவளிக்க அனுமதி.
மேலும், தெருநாய் தொடர்பான அனைத்து நிலுவை வழக்குகளையும் மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும், இதற்கான பதிலை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமும் கோரப்பட்டுள்ளது.



Leave a Reply