கடுமை குற்றங்களில் கைது: பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பதவி நீக்க புதிய மசோதா – நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

Spread the love

பிரதமர், முதலமைச்சர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்களை தானாகவே பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று முக்கிய திருத்த மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்யவுள்ளார். இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதாக்கள்:

  • யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2025

  • அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா 2025

  • ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025

இந்த மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படாது என்றும், அறிமுகத்துடன் கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகின்றது. தற்போது பதவியில் உள்ள ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலோ அல்லது அவர்கள் கைது செய்யப்பட்டாலோ, சட்டத்தின் கீழ் அவர்களை பதவியில் இருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீக்குவதில் தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்கும் நோக்கத்தில் இந்த மசோதாக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.