பிகாரில் இன்று தொடங்குகிறது ராகுலின் வாக்குரிமைப் பேரணி

Spread the love

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கத்திலும் பிகாரில் எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளன.

இந்த ‘வாக்குரிமைப் பேரணி’ ஆகஸ்ட் 17-ஆம் தேதி சசாரத்தில் தொடங்குகிறது. செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்தப் பேரணி நிறைவடைய உள்ளது.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) தலைவர் மற்றும் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘காணாமல் போன வாக்குகள்’ என்ற தலைப்பில் புதிய காணொலியை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

அந்தக் காணொலியை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, “உங்களின் வாக்குகள் திருடப்படுவது என்பது, உங்களின் உரிமையும் அடையாளமும் பறிக்கப்படுவது போலாகும். வாக்குத் திருட்டுச் சாட்சியைப் பற்றி மத்திய அரசு இனியும் மவுனம் காக்க முடியாது. மக்கள் விழித்துள்ளனர்” என்று பதிவு செய்துள்ளார்.