அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் ED அதிரடி சோதனை – திண்டுக்கல்லில் பரபரப்பு!

Spread the love

திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (ஆகஸ்ட் 16, சனிக்கிழமை) காலை 7.15 மணி முதல் அமலாக்கத் துறையினர் (ED) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் வீட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த ED அதிகாரிகள் சோதனையை துவங்கினர். அவரது மகனும் பழநி தொகுதி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீடு (சீலப்பாடி), மகள் இந்திரா வீடு (அசோக்நகர்) ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கியுடன் சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவதை அறிந்த திமுக ஆதரவாளர்கள் வீடு அருகே திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சோதனைகள், கடந்த காலத்தில் அவர் வீட்டுவசதித் துறையில் அமைச்சர் பதவியில் இருந்தபோது, உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஜாபர்சேட் மனைவிக்கு விதிமுறைகளை மீறி வீடு ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் உள்ள ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் மூன்று இடங்களில் தொடக்கமான இந்த சோதனைகள், எதிர்பாராத வகையில் இன்று அதிகாலை தொடங்கியதால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.