வெளியில் வராமல் இருந்தால் எதற்காக அரசியல் தலைவராக இருக்கிறார்? – விஜயை விமர்சித்த தமிழிசை

Spread the love

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயமாக்கல் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், அவர்களை நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய் தவறியிருப்பது குறித்து பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 5, 6வது மண்டலங்களில் குப்பைகள் அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்ததையடுத்து, சுமார் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் வேலை இழப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு இல்லாத நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் 11வது நாளை எட்டியுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் பணியாளர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், விஜய் பொதுமக்கள் சந்திக்கும் இடங்களுக்கு வர மறுக்கிறார் என தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

“விஜய் நீண்ட நாட்களாக தூக்கத்தில் இருந்தார் போல, ராகுல் காந்தி வந்ததையடுத்து திடீரென எழுந்தார். ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளில் சத்தமின்றி இருந்தவர், இப்போது மட்டும் பேசுகிறார்,” என தமிழிசை தெரிவித்தார்.

மேலும், “ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்றால், மக்கள் இருக்கின்ற இடத்துக்கு சென்று சந்திக்க வேண்டும். கூட்டம் வந்துவிடுமா என பயந்து வீட்டுக்குள்ளேயே இருப்பது எனால் ஏற்க முடியாது. மக்கள் அவரை சென்று பார்க்க வேண்டுமா?” என்ற ஆவேசமான கேள்வியும் எழுப்பியுள்ளார்.

விஜயின் தற்போதைய செயல்பாடுகள் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்புவதாகவும், பொதுமக்கள் பங்களிப்பை நம்பிக்கையுடன் எதிர்நோக்க வேண்டிய தருணமிது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.