திருப்பூரில் மீண்டும் வரதட்சணை சாவு – 2 கோடி செலவில் திருமணம், 10 மாதத்தில் உயிரிழந்த இளம்பெண்

Spread the love

திருப்பூர் மாவட்டம் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்வருடன் 2024 செப்டம்பர் 15 அன்று திருமணம் ஆனார். திருமணத்தில் பெண் வீட்டார் 120 சவரன் நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கம், ரூ.38 லட்சம் மதிப்புள்ள இனோவா கார் உள்ளிட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள வரதட்சணை வழங்கினர். இதற்கு மேலாக மண்டபம், உடை, சமையல் உள்ளிட்ட செலவுகள் சேர்த்து மொத்த திருமணச் செலவு ரூ.2 கோடி வரை சென்றது.

இவ்வளவு வழங்கியும், மணமகன் பக்கம் கூடுதலாக ரூ.50 லட்சம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ப்ரீத்தியின் பூர்வீக சொத்து விற்கப்பட்டபோது, அந்த பணத்திலிருந்து அந்த தொகையை பெற்றுத்தரும்படி ப்ரீத்தியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்தனர். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ப்ரீத்தி, குடும்பத்தினரிடம் மன வேதனையை பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வுக்கு சில நாட்களில், வீட்டில் தனியாக இருந்த ப்ரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்வர், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் தாய் உமாவை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக வரதட்சணை கொடுமையால் மரணங்கள் அதிகரித்து வருவதால், இதற்கு அரசின் தலையீடு அவசியம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.