அமைச்சர் அன்பில் மகேஷ்: “AI, Robotics பாடத்திட்டங்களை தமிழக மாநில கல்விக்கொள்கையில் சேர்க்க வேண்டும்” – மாணவர்களின் திறனை வளர்க்க புதிய மாநில கல்விக்கொள்கை அறிமுகம்

Spread the love

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மாநில கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாநில கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது, “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த புதிய கல்விக்கொள்கையில் இருமொழி கொள்கையை வலியுறுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கும் கல்வி அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

“வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை ஆகியவை இக்கொள்கையின் அடிப்படையாகும். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையில் மாற்றங்களை கொண்டு வருவது, அவர்கள் திறன் வளர்ச்சிக்கு உதவுவது முக்கியம்,” என்று அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் கூறினார், “மாநில கல்விக்கொள்கை ஆண்டுதோறும் காலநிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும். தேர்வுகளில் உள்ள அச்சத்தை நீக்கி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கம். உடற்கல்வி போன்ற பாடங்களையும் கவனத்தில் கொண்டு உள்ளோம்.”

அமைச்சர் குறிப்பிட்டபடி, “இன்றைய தொழில்நுட்ப சூழ்நிலையில், AI (அறிவுசார் இயந்திரம்), Robotics (தானியங்கி இயந்திரங்கள்) போன்ற பாடத்திட்டங்களை பள்ளிக் கல்வியில் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இது மாணவர்களுக்கு எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு உதவும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நேரத்திலேயே மாணவர்கள் தங்களது ஆர்வங்களையும் திறன்களையும் அடையாளம் காண்பார்கள்; மேலும் அவர்கள் எதிர்கால கல்லூரி தேர்வுகளுக்கான வழிகாட்டி பெறுவார்கள்.”

தமிழகத்தில் 500 பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக மாற்றும் திட்டத்துடன் புதிய மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட உள்ளது. இத்தகைய மாற்றங்கள் தமிழக கல்வி தரத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.