எல் அண்டு டி பைபாஸ் சாலையில் ஒரே ஒரு சுங்கச்சாவடிதான்… கோவை மக்கள் ஹேப்பி

Spread the love

கோவையில் சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் 5 சுங்கசாவடிகள் மூடப்படுகின்றன. இனி, மதுக்கரை சுங்கச் சாவடி மட்டும் இயங்க போகிறது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் உட்கட்டமைப்பில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக உள்ளது. 1999ல் இருந்து 2029 வரை 30 ஆண்டுகளுக்கு சுங்க வரி வசூல் செய்யும் உரிமை எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 6 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு அந்நிறுவனம் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தது.

நீலாம்பூரில் இருந்து மதுக்கரை செல்லும் 28 கிலோ மீட்டர் சாலை மட்டும் இரு வழி சாலையாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் எல் அண்டு டி நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சாலையில் இருந்த 6 சுங்கச்சாவடிகளில் 5 சுங்க சாவடிகள் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது.

இன்று முதல் மதுக்கரைக்கு அருகில் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் கட்டணம் வசூலிக்கும் சுங்க சாவடியாக செயல்படும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் மதுக்கரை சுங்கச்சாவடியில் இன்று முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அந்த வகையில் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் வணிகம் அல்லாத வாகனங்கள் ரூ.350 சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் பெற தகுதி உள்ளது.

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்கள், இலகுரக வாகனங்களுக்கு ரூ.20 முதல் கன வாகனங்களுக்கு ரூ.115 வரை சலுகை அளிக்கப்படும். 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணங்களுக்கு 25 சதவீதம் சலுகை அமல்படுத்தப்படுகிறது. பணம் செலுத்தியதில் இருந்து ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் ஒற்றை பயணங்களுக்கு 33 சதவீதம் சலுகை கிடைக்கும்.

இதர கார், ஜீப், வேன் அல்லது இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.35, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.55ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மினி பஸ், இலகு ரக வணிக வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.60, ஒரே நாளில் திரும்பும் பயணத்துக்கு ரூ.90ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஸ் அல்லது டிரக் வாகனங்களுக்கு ஒரு பயண கட்டணமாக ரூ.125, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.185ம் வசூலிக்கப்படும்.

அதேசமயம் 3 அச்சு வணிக வாகனத்துக்கு ஒரு பயணத்துக்கு ரூ.135, ஒரே நாளில் திரும்பும் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கனரக கட்டுமான எந்திர வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.195, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.290ம் வசூலிக்கப்படுகிறது.

அதே சமயம் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு பயணத்துக்கு ரூ.235, ஒரே நாளில் திரும்பும் பயண கட்டணமாக ரூ.350 வசூலிக்கப்படும்.