அடுத்த துணை ஜனாதிபதி யார்… கோவை மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பா?

Spread the love

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது . துணை ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நிறைவடைந்து விட்டது. குறிப்பாக அந்த பதவிக்காக வாக்களிக்க உள்ளோரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் அடிப்படையில் அகர வரிசையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் மாதமே நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிகிறது.

நம்ம ஊடகங்கள் எப்போதும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவரையும் இதேபோல பதவிகளுக்கான ரேஸில் கோர்த்துவிடுவது வழக்கம். தமிழ்நாட்டிலும் அப்படித்தான் தமிழிசை தொடங்கி அண்ணாமலை வரை பலரையும் ஊடகங்கள் யூகங்களாக எழுதிக் கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனும் இந்த ரேஸில் இருக்கிறாராம்.. பரபரப்பான சூழ்நிலையில் சிபிஆர் டெல்லிக்கு விரைந்திருப்பது இந்த யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக வட்டாரங்களில் பேசிய போது, “சிபிஆரைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். அதிமுக, பாஜகவின் வாக்கு வங்கியாக இருக்கிறது கவுண்டர் சமூகம். தற்போது சிபிஆர்- துணை ஜனாதிபதியாக்கப்பட்டால், சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு தமிழனை நாட்டின் உயரிய பதவிக்கு உட்கார வைத்தது அதிமுக- பாஜக கூட்டணி என்ற பிரசாரத்தை வீச்சாக முன்னெடுக்க உதவும்; கொங்கு பெல்ட்டில் ஓட்டுக்களை பல்க்காக அள்ளவும் உதவும்.. அதனால் சிபிஆருக்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என்கின்றனர்.

சி.பி.ஆர் துணை ஜனாதிபதியாகும்பட்சத்தில் , அடுத்து ஜனாதிபதி ஆகவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.