கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை வாழ்வு மையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை அள்ளும் வாகனத்தில், வாக்காளர் அடையாள அட்டைகள், மை பாட்டில்கள், ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்கள் சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப் பணியாளர் ஒருவர் வாகனத்தை இயக்க வந்தபோது, இந்த அதிர்ச்சி தரும் விடயங்களை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து வந்த தாசில்தார் மகேஷ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சம்பவ இடத்தில் இருந்து 47 வாக்காளர் அடையாள அட்டைகள், 80 மை பாட்டில்கள், 10-க்கும் மேற்பட்ட சீல்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த வாக்காளர் அட்டைகள் அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கே உரியவை எனத் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், சங்கராபுரம் தேர்தல் அலுவலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் குப்பையாக நினைத்து இரும்புக் கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த இரும்பு பொருட்களை கடலூர் வியாபாரி ஒருவர் வாங்கி, அதில் வாக்காளர் அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்த பின் அவற்றை குப்பை வண்டியில் வீசினார்.
இந்தத் தவறான செயலால், தேர்தல் பாதுகாப்பு நடைமுறையில் அதிக கவனம் தேவைப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.



Leave a Reply