முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி முன்னிலையில், கோவையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிமுகவில் இன்று (31 ஜூலை) இணைந்தனர். திமுக, அமமுக, தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த இளைஞர்களின் இந்த இணைப்பு நிகழ்வு, அதிமுகவின் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” புரட்சி பயணத்துக்கு இளைஞர்கள் தரும் ஆதரவாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சி கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில், கழக அம்மாபேரவை இணைச் செயலாளர் முத்துவெங்கடேஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், எம்.எஸ்.எம் ஆனந்தன், வி.பி. கந்தசாமி, கழக கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் தோப்பு அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசும் போது எஸ்.பி. வேலுமணி கூறியதாவது: “நாங்களும் உங்களைப் போல் சாதாரணமாக இந்தக் கட்சியில் சேர்ந்தவர்கள்தான். இன்று உயர்ந்த பதவிகளில் இருப்பது அதிமுகவின் தனிச்சிறப்பே. இது மற்ற எந்தக் கட்சியிலும் நடக்காது.”
அதிமுக ஆட்சி வரும்போது தான் வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்புகள், மக்கள் நலத்திட்டங்கள் மேம்பட்டதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கான மக்கள் ஆதரவு கோவையில் பெருகி வருவதாகவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். “இன்று இளைஞர்கள் கட்சியில் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பெற்றோரை கவனிக்க வேண்டும். எப்போதும் உங்களுடன் இருக்க அதிமுக தயாராக உள்ளது,” என அவர் தெரிவித்தார்.



Leave a Reply