சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த கவின் என்பவர், காதல் தொடர்பாக ஏற்பட்ட விவகாரத்தில் ஆணவக் கொலைக்கு இரையானார். இத்தனியாண்டு காதல், இரு குடும்பங்களுக்கிடையே மோதலாக மாறி, கொடூர முடிவுக்கு காரணமானது.
கவின், நெல்லையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தம்பதியான சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணி தம்பதியின் மகளுடன் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கவின் மீது மிகுந்த எதிர்மறையான மனநிலை கொண்டிருந்தனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தந்தையின் சிகிச்சைக்காக கே.டி.சி. நகர் மருத்துவமனைக்கு சென்ற கவின், அங்கே அந்த பெண்ணின் சகோதரன் சுர்ஜித்தால் சந்திக்கபட்டுள்ளார். பின்னர், அடையாளம் தெரியாத நபர்கள் கவினை வெட்டிக் கொன்றனர். சம்பவத்திற்குப் பின் சுர்ஜித் தானாகவே காவல்துறையில் சரணடைந்தார்.
விசாரணையில், “சகோதரியை காதலிக்கும்படி கவின் டார்ச்சர் செய்ததால்” என்பதே கொலைக்கான காரணம் என சுர்ஜித் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுர்ஜித்துக்கு எதிராக கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் உதவி ஆணையாளர் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கவினின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, “பெண்ணின் பெற்றோர் தூண்டுதலின் பேரில் எங்கள் மகன் கொலை செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறி, சரவணன் – கிருஷ்ணவேணி தம்பதியர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்த விசாரணையில், சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் உதவி ஆய்வாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களது தூண்டுதலின் பேரிலேயே கவினை சுர்ஜித் கொலை செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீதும் மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கை தொடர்ந்து 2வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய உதவி ஆய்வாளர்கள் தம்பதியருக்கு டிஐஜி விஜயலட்சுமி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
Leave a Reply