சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பழனி. கிருஷ்ணசாமியின் புதிய நூல் வெளியீடு

Spread the love

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பழனி. கிருஷ்ணசாமி எழுதிய ‘மனிதன் உடம்பல்ல : பெரியசாமித்தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு’ புத்தகம் வெளியீடு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தமிழாசிரியர் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பழனி. கிருஷ்ணசாமி எழுதிய ‘மனிதன் உடம்பல்ல : பெரியசாமித்தூரனின் பண்பாட்டுப் பங்களிப்பு’ எனும் நூல் வெள்ளிக்கிழமை அன்று கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறும் ‘கோயம்புத்தூர் புத்தக திருவிழா’ நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்நூலை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டார். புதுமலர் பண்பாட்டிதழின் ஆசிரியர் கண. குறிஞ்சி மற்றும் காலச்சுவடு அரசியல் பண்பாட்டிதழின் பொறுப்பாசிரியர் நா.சுகுமாரன் இந்த நூல் குறித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் பேசுகையில் பெரியசாமித்தூரன் என்பவர் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகபெரும் ஆளுமை எனவும், அவரை தமிழ் சமூகம் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார். ஐரோப்பிய அறிவுசார் நாகரிகத்திற்கு இணையாகக் கருதப்படும் தமிழ் கலை களஞ்சியம் உருவாவதற்கு உழைத்தவர் என்றார். பழனி. கிருஷ்ணசாமி எழுதிய இந்த நூல் பெரியசாமித்தூரனின் முழுமையான படைப்பை பற்றிய சிறந்த ஆய்வு என அவர் கூறினார்.

இந்த புத்தகத்தை எழுதிய பழனி கிருஷ்ணசாமி பேசுகையில், “தமிழர் நாகரிகம் என்பது உலக நாகரிகத்திற்கு இணையானது என்ற பேச்சு தற்பொழுது எழுந்திருக்கிறது. இதை உலகத்தார் நம்ப வேண்டும் என்றால், நாம் நிறைய எழுத வேண்டும், பேச வேண்டும், நிறைய எடுத்துக்காட்டுகளை தர வேண்டும். அந்தப் பொறுப்பை தனிமனிதனாக இல்லாமல் சமூகமாக இருந்து செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வே இந்த புத்தகத்தை எழுத காரணம்” என கூறினார்.