மாணவர்களின் கல்வி நிதி கேட்டு குரல் கொடுத்த மமஇ: கோவையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Spread the love

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட அவர்கள், NO RTE FUND NO ENTRY MODI, தமிழகத்திற்கான கல்வி பணத்தை உடனடியாக விடுவி போன்ற பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேட்டியளித்த அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், தமிழகத்தின் கல்வி நிதியை வழங்காமல் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டிப்பதாக தெரிவித்தார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தற்போது வரை நிதியை வழங்காமல் இருப்பதாக குறிப்பிட்ட அவர் மாணவர்களின் கல்வியை கெடுத்துவிட்டு பிரதமருக்கு தமிழகத்தில் என்ன வேலை என கேள்வி எழுப்பினார்.

கல்வி நிதி தராமல் இருப்பது அயோக்கியத்தனம் என்றும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நுழைவது தமிழ்நாட்டிற்கு அவமானம் என்றும் தெரிவித்தார். அனைத்து கட்சியினர்களையும் குழந்தைகளுக்காக பேச வைப்பது தான் எங்கள் வேலை என்றும் இது சம்பந்தமாக பல்வேறு கட்சியினரும் அறிக்கை வெளியிட்டதை குறிபிட்ட அவர் அனைத்து கட்சியினரும் சாலையில் இறங்கி போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் போன்றோர் தமிழக குழந்தைகளுக்காக என்ன பேசினீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பிய குழந்தைகளின் கல்வியை நாசமாக்கதான் பாஜக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்