கோவை மாநகரத்தின் முக்கிய சாலையாக விளங்கும் அவிநாசி சாலையில், மின் விளக்குகள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரூ.1,791.23 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 10.1 கிலோமீட்டர் நீள மேம்பாலப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த மேம்பாலப் பணிகள், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியபோது, அவிநாசி சாலையில் இருந்த மின் விளக்குகள் அகற்றப்பட்டன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். பின்னர், தற்காலிக தூண்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
தற்போது மேம்பாலம் விரைவில் நிறைவடைவதால், சாலையின் மையப்பகுதிகளில் நிரந்தர மையத்தடுப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு, அவை மீது புதிய மின் விளக்குக்கம்பங்களை பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக, தேவையான கம்பங்கள் அடுக்கடுக்காக மையப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அதே இடத்திலேயே நிறுவப்படுகின்றன.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சமீபத்தில் கூறியதாவது, “இந்த மேம்பாலப் பணி ஆகஸ்ட் 15க்குள் முழுமையாக முடிக்கப்படும்” என்றார். இதன் தொடர்ச்சியாக நடைபெறும் மின் விளக்குகள் பொருத்தும் பணி, அவிநாசி சாலையின் முழு 10.1 கிலோமீட்டர் பகுதிக்கும் விரைவில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், கோவையின் இந்த முக்கிய சாலை இரவு நேரங்களிலும் முந்தையதைப் போலவே ஜொலி ஜொலிக்க ஆரம்பிக்க இருக்கும் என்ற மகிழ்ச்சியை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Leave a Reply