அதிமுக ஆட்சி வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கத்துடன் பட்டுப்புடவை வழங்கப்படும் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எனும் முழக்கத்துடன் மாநிலமுழுவதும் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாபநாசம் பஜார் சாலையில் உரையாற்றினார்.

தொடக்கமாக, தற்போதைய திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், கடந்த 50 மாதங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக எதுவும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி காலமான 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு இந்திய அளவில் சாதனை படைத்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது காவல் துறை செயலிழந்துள்ளதாகவும், மாநிலத்தில் கள்ளச்சாரயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஜோராக விற்பனையாகி வருவதாகக் கூறினார். “முக அரசு பொதுமக்களை மறந்து, வீட்டு மக்களையே எண்ணுகிறது,” என்றார்.

TNPSC Group 4 தேர்வு முறைகேடுகளால் குழப்பமானதாக மாறியிருப்பதாக கூறிய அவர், அதனை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதிமுக ஆட்சி வந்தவுடன் நெசவாளர்களுக்கு உதவும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கத்துடன் பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

2026ல் உருவாகும் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரியதாக இருந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் சிறுமி முதல் வயோதிபர் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என அவர் உரையில் தெரிவித்தார்.