தி.மு.க,அ.தி.மு.க.,ம.தி.மு.க.,காங்கிரஸ்.,ம.நீ.ம. என பழ.கருப்பையாவின் செல்லாத கட்சிகளே இல்லை. தற்போது தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருபவரிடம், பிரபல பத்திரிகை ஒன்றுக்க பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
எல்லோரும் குற்றவாளிகள். தனது தாயின் தாலியை அடமானம் வைத்து தேர்வு எழுத போனவர்தான் துரைமுருகன். அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது? 2002ல் துரைமுருகன் மீது போடப்பட்ட வழக்கு இப்போது வரை முடிவுக்கு வரவில்லை. சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும், அரசியல்வாதிகள் சிறைக்குப் போவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். மற்ற வழக்குகளை ஒத்திவைத்துவிட்டு அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் உடனே விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பதைப்போல இருக்கிறது தி.மு.க. அரசு. சிறைக்கு போனவரை மந்திரி ஆக்குகிறார்கள். நாள்தோறும் கொலைகள் பெருகுகின்றன. எடப்பாடி ஆட்சி செய்த வரை தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் கோடி கடனை பெருக்கி இருக்கிறார்கள். ‘இலவச பயணம் கொடுக்கிறேன், ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்’ என்று கடனை அதிகப்படுத்திக்கொண்டே போனால், அதையெல்லாம் உங்கள் சொந்த பணத்தில் கட்டுவீர்களா?
அம்பேத்கர் காலத்தில்கூட குளத்தில் தண்ணீர் எடுக்காதே என்றுதான் சொன்னானே தவிர, மலத்தை குடிநீரில் கலக்கும் கொடுமை இல்லை. திருமாவளவனுக்கு வேங்கை வயல் முக்கியமில்லை. இரண்டு சீட் தான் முக்கியம்.
ஆர்.என்.ரவி ஒரு பக்குவமற்றவர். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள்கூட வெறுக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு இருக்கிறது. அவருக்கு அனுப்பிய 10 தீர்மானங்களுக்கு கையெழுத்துப் போடாமல் வைத்திருந்து, உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறது என்றால் அந்த பதவி எதற்கு? அவர் இல்லாமலேயே துணைவேந்தர்களை நியமிக்கக் கூடிய நிலைமை வந்துவிட்டது. அதன்பிறகும் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறேன், அதற்கு துணை ஜனாதிபதியை அழைப்பேன் என்றால் என்ன அர்த்தம்? ஆளுநருக்கு மரியாதையே இல்லை என்று நினைக்கிறேன். ‘உன்னால் எனக்குத்தான் அசிங்கம்!’ என மத்திய அரசாங்கமாவது சொல்ல வேண்டுமா இல்லையா? இப்படிப்பட்ட ஆளுநரை மத்திய அரசு மாற்றாமல் இருப்பது ஏன் என்றுதான் கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Leave a Reply