கோவை மாநகராட்சி நகரத்தை மேலும் சுத்தமாக வைத்திருக்கவும், தெருக்களில் குப்பைகள் பரவுவதை தடுக்கும் வகையில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. “இனி குப்பைகள் காற்றில் பறக்காது” என்ற திட்டத்தின் கீழ், ராட்சத பாட்டில் வடிவத்தில் உருவாக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் தற்போது முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.
இந்த திட்டம் கோவை மாநகராட்சி, அலையன்ஸ் கிளப் ஹில் சிட்டி அசோசியேஷன் மற்றும் உலக மலையாளி கவுன்சில் ஆகிய தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 50 இடங்களில் இந்த குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.
திட்ட துவக்க விழா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குப்பைகள் சிதறாமல் இருக்க இந்த பாட்டில் வடிவ தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
மண்டல வாரியாக தொட்டிகள் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளன:
-
மத்திய மண்டலம்: காந்திபுரம், உக்கடம், வ.உ.சி பூங்கா, ரேஸ் கோர்ஸ் – 22 தொட்டிகள்
-
கிழக்கு மண்டலம்: சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உழவர் சந்தை – 5 தொட்டிகள்
-
மேற்கு மண்டலம்: வடவள்ளி, மருதமலை, டி.பி சாலை – 10 தொட்டிகள்
-
வடக்கு மண்டலம்: சரவணம்பட்டி, துடியலூர், பீளமேடு – 5 தொட்டிகள்
-
தெற்கு மண்டலம்: குறிச்சி, ஈச்சனாரி, போத்தனூர் – 8 தொட்டிகள்
மாநகராட்சி ஆணையர் மேலும் கூறுகையில், இத்திட்டம் மீள்சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவியாக அமையும் எனவும், பொதுமக்கள் இதில் ஓருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புது முயற்சி, நகர மக்களின் சுத்தமாக வாழும் உரிமையை உறுதி செய்யும் ஒரு முன்னேற்றமான படியாக பார்க்கப்படுகிறது.



Leave a Reply