அடுத்த 9 மாதங்களில் கோவை மாநகரில் பல முக்கிய அரசு மேம்பாட்டு திட்டங்கள் நிறைவு பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தற்போது கோவையில் நிறைவேற்றப்பட்டு வரும் mega திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறையில் உள்ளன. இவை அனைத்தும் தேர்தலுக்கு முன்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில், ரூ.9.67 கோடி மதிப்பில் ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்படும் ஹாக்கி ஸ்டேடியம் தற்போது 50% அளவுக்கு பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் அடுத்த 9 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், மேற்கு புறவழிச்சாலை திட்டம் 32.4 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மதுக்கரை–மாதம்பட்டி பகுதிக்கு 70% வரை பணி முடிந்துள்ளதுடன், மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் ஆகஸ்ட் 2025க்குள் முழுமையாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் உருவாகும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 1.98 லட்சம் சதுர அடியில், 8 மாடிகள் கொண்ட கட்டடமாக உருவாகிறது. தற்போது 4வது மாடி வரை பணி முடிந்துள்ள நிலையில், ஜனவரி 2026ல் இது திறக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
அவிநாசி சாலை மேம்பால திட்டமும் 95% வரை நிறைவடைந்துள்ளது. ஹோப்ஸ் பகுதியில் 52 மீட்டர் ரயில்வே பாலம் பொருத்தும் பணி சில நாட்களில் முடிவடையும். இதன் முழுமையான நிறைவு ஜூலை 30, 2025க்குள் நடைபெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
மேலும், காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் நடைபெறும் செம்மொழி பூங்கா திட்டமும் இறுதிகட்டத்தில் உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த திட்டத்தின் பூங்கா பகுதி 80% மற்றும் மாநாடு மையம் 85% வரை முடிந்துள்ளன.
இந்த திட்டங்களின் முழுமையான செயல்பாடு கோவை மக்களுக்கு நேரடி நலன் அளிக்கும் விதமாகவும், நகரத்தின் மேம்பாட்டை தேர்தலுக்குள் கண்கொட்டும் வேகத்தில் முன்னேற்றும் விதமாகவும் உள்ளதாக நம்பப்படுகிறது



Leave a Reply