கோவைபுதூரில் குழந்தைகளுடன் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி!

Spread the love

கோவைப்புதூரில் செயல்பட்டு வரும் சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்ட் காப்பகத்தில், வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை கழித்தார். இந்த காப்பகத்தில் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு தேவையுள்ள குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

தற்போது நடந்த கலை நிகழ்ச்சியில் திவ்யா துரைசாமி கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் அளித்ததோடு, சினிமா பாடல்களுக்கு அவர்களுடன் உற்சாகமாக நடனமாடினார். இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு பேரதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அளித்தது. நிகழ்ச்சி முடிவில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து உரையாற்றிய நடிகை திவ்யா துரைசாமி, “பெண் மற்றும் சிறப்பு தேவையுள்ள குழந்தைகளுடன் நேரம் கழிப்பது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம். நமக்கு சிறிதாகத் தோன்றும் உதவி, அவர்களுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே நம்மால் இயன்றவரை உதவி செய்ய நாம் அனைவரும் முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.

காப்பகத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், “பாதுகாப்பு, கல்வி, பராமரிப்பு ஆகியவைகளை சிறப்பாக வழங்க இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்க இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு எல்லோரும் பங்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்வு சமூகத்தில் குழந்தைகள் மீதான அக்கறையை வலியுறுத்தும் ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது.