,

கோவையில் நடைபயிற்சி மேற்கொண்ட எடப்பாடியார்

Spread the love

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று (ஜூலை 8) காலை கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தனது தேர்தல் பரப்புரையை கோவை மாவட்டத்திலிருந்து தொடங்கிய அவர், பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் கலந்து கொண்டார்.

நடைபயிற்சியின்போது, கோவை கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 2024–25 நிதியாண்டில் தமிழகத்திற்கு உபரி வருவாய் இருந்த போதும், தி.மு.க அரசு கடன் வாங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும், இந்தச் சூழ்நிலையை விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க ஆட்சியின்போது அனைத்து அணைகளிலும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் தி.மு.க ஆட்சி வந்த பிறகு அணைகள் புனரமைக்கப்படாமல் விட்டுவைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க அரசு 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததை எடப்பாடி பழனிசாமி நினைவூட்டினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 50,000 பேருக்குமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறி, தி.மு.க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.