“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற நெடுநோக்குடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது மாநிலமெங்கும் நடைபெறும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மெகா அளவில் துவக்கியுள்ளார்.
இந்தப் பயணத்தின் முதற்கட்டமாக, மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இ.பி.எஸ், பின்னர் மேட்டுப்பாளையம் சாலை மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உரிமையாளர்களுடன் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.
அதில், திமுக ஆட்சியில் விவசாய நலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சி இருந்தபோது உருவாக்கப்பட்ட உபரிநீரை ஏரிகளுக்கு மாற்றும் திட்டங்களை தற்போதைய அரசு நிராகரித்து விட்டதாகவும், விவசாய நிலைகளை பாதுகாக்க திட்டமிடப்பட்ட தடுப்பணைகளின் உயரம் குறைக்கப்பட்டதாகவும் இ.பி.எஸ் குற்றம்சாட்டினார்.
“விவசாயிகளின் தேவைகள், நெசவாளர்களின் உரிமைகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகியவை எங்கள் முன்னுரிமையாக இருக்கும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும்,” என அவர் உறுதியளித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்காக வழங்கப்பட்ட இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர். செங்கல் சூளை தொழிலாளர்களும் சமூக ஆர்வலர்கள் வழக்குப்போட்டு தங்களது தொழில்கள் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.
இந்த பிரச்சாரப் பயணம், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் மாபெரும் தேர்தல் துவக்க நிகழ்வாக கருதப்படுகிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் சூடு ஏற்கெனவே கிளம்பத் தொடங்கியுள்ளது.
Leave a Reply