ஆ.வெ.மாணிக்கவாசகம்
செய்யாமல் செய்த உதவிக்கு
வையகமும் வானகமும் ஆற்றல் அரிது
– தெய்வப் புலவரின் திரு வாக்கு.
ஒருவர் கேட்காமல் செய்யும் உதவிக்கு இந்த உலகத்தினையும், அந்த வானுலகத்தினையும் கைமாறாக கொடுத்தாலும் அரிதே என வான் புகழ் வள்ளுவன் பகருகிறார்.
இந்தப் பேருலகத்தில் பிறருக்கு உதவி செய்ய அனைவரும் முன் வருவதில்லை. அந்தந்த பகுதிகளில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே, ஓடோடி பிறருக்கு உதவும் உள்ளத்தினை பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர்.
அந்தப் பெரும் புகழுடன் நம் முன்னே வாழ்ந்து வருபவர் தான் வாழை ம.பாபு.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூரில் விவசாய தொழில் செய்து வந்த கே.ஆர். மணிகவுடர் – எம்.ராஜம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகன்தான் வாழை ம. பாபு 03.04.1976 ஆம் ஆண்டு பிறந்த பாபு 10-ம் வகுப்பு வரை படித்த பின்பு, சமுதாயத்திற்கு பயன்படும் தொழிலை செய்ய வேண்டும் என்ற வேட்கை ஏற்பட்டதன் காரணமாக, அனைவரும் உண்டு மகிழும் வாழை இலை வியாபாரத்தை, தன்னிடமிருந்த சொற்ப தொகையினைக் கொண்டு தொடங்கினார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள உணவு விடுதிகளில் பாபு, வாழை இலையினை விநியோகம் செய்தார்.
மேலும் கேரள மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு தினம் தோறும் 200 வாழை இலை கட்டுகளை அனுப்பினார்.
அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை, உற்றார் உறவினர்கள், தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த பொது மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்தார். இந்த நூற்றாண்டில் உலக மக்களையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது கொரோனா பெருந்தொற்று.
அடிப்படையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரான வாழை ம. பாபு, இந்த கொரோனா காலகட்டம், அவர் மனதில் பெரும்துயரத்தை ஏற்படுத்தியது. அன்றாடம் கூலி வேலை செய்யும் குடும்பத்தினரின் நிலையைக் கண்டு பெரிதும் வாடிய பாபுவின் மனது, கொரோனா பீடித்திருந்த அனைத்து நாட்களிலும்,தமது வீட்டில், சமையல்காரர் மூலம் சமைத்து தொண்டாமுத்தூர் பகுதி மட்டுமல்லாது, அங்குள்ள மலைவாழ் கிராமமான அட்டுக்கல் பகுதிக்கு, தினம்தோறும் தானே வாகனத்தில் உணவினை கொண்டு சென்று மலைவாழ் மக்களின் பசி துயரினை நாள்தோறும் போக்கினார்.
அங்குள்ள நூறு குடும்பத்தினை சேர்ந்த, 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மட்டுமின்றி மருந்துகள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்கி மகிழ்ந்தார்.
தொண்டாமுத்தூர் பொது நல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கொரோனா காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி களான வஞ்சிமா நகர், மல்லிகா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டது. தனது தந்தை கே.ஆர். மணிகவுடர், உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, அவரை கவனிக்க பெரும் சிரமப்பட்டுள்ளார். அப்போது கோவை கிராஸ் கட் ரோட்டில் உள்ள தேவி டெக்ஸ்டைல் நிறுவனத்தார் வழங்கி வரும் உதவி தொகையை கேள்விப்பட்டு, அங்கு தனது தாயுடன் சென்று தமது தந்தையின் உடல் நிலையை எடுத்துக் கூறி, ரூ.3 ஆயிரம் உதவித்தொகை பெற்று வந்ததை நன்றியோடு நினைவு கூறும் பாபு, இந்த நிகழ்வு தமது உதவும் எண்ணத்துக்கு அச்சாணி போட்டது என பெருமையுடன் கூறினார்.
இல்லாதோருக்கு இயன்றவரை உதவி செய்யும் போது,எனது மனது பெருமிதம் கொள்கிறது ; தொடர்ந்து இப்படி உதவி கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என உற்சாகத்தோடும்,உளப்பூர்வமாகவும் வாழை ம.பாபு கூறினார்.
தாம் கற்ற கல்வி, அடுத்த பிறவிக்கும் துணை நிற்கும் என்பதனை உணர்ந்த, தொழிலதிபர் வாழை ம. பாபு,தொண்டாமுத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கும் தேவையான தளவாட பொருட்கள், கட்டிட பராமரிப்பு, விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், குடிநீர், நூலகம், பள்ளிகளில் நடைபெறும் விழாக்களுக்கு பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை தொடர்ந்து பல ஆண்டு காலமாக செய்து வருகிறார்.
மேலும் இந்த பள்ளியில் மட்டுமின்றி, தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உதவித்தொகை, பாட புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவற்றை தாராளகுணத்துடன் செய்து வருகிறார்.
தேர்வுகளுக்கு தயாராகும் மாணவமாணவிகளுக்கு தேர்வுக்கு தேவையான மாதிரி வினா – விடை வங்கி, தேர்வு எழுத பொருட்கள் ஆகியவற்றினை தொடர்ந்து அளித்து வருகிறார்.
பள்ளி மாணவ – மாணவிகள் மட்டுமின்றி,கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையினை ஆண்டுதோறும் அளித்து,அக மகிழ்ச்சி கொள்கிறார்.
திடீரென உடல்நிலை பாதிக்க பட்டோர், மருத்துவமனையில் முன்பணம் கட்டுவதற்கு உதவிக் கரம்நீட்டி வரும் வாழை ம.பாபு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிவதில் பேரானந்தம் ஏற்படுவதாக பரவசப்
பட்டு சொல்கிறார்.
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு, அதிக மதிப்புள்ள காது கேட்கும் கருவியினை தமது சொந்த செலவில் வாங்கி அளித்து வருகிறார். கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, அதிக உதவிகள் செய்து, அவர்களுக்கு பேராதரவு அளித்து வருகிறார் .
2020-ஆண்டில் ராகுல் ரியல் எஸ்டேட் அன்ட் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தமது சொந்த இடத்தில், குறைந்த பட்ஜெட்டில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணியினை தொடங்கினார். முன் பணமின்றி வரு வோருக்கு, தாமே அந்த தொகையினை அளித்து, வீடு இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வீட்டு கனவினை நனவாக்கும் வகையில் உதவிகளை புரிந்து வருகிறார் வாழை ம.பாபு. மேட்டுப்பாளையம் சாலை சாந்தி மேடு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலையில் வீட்டு
மனைகளை ஏற்படுத்தி அங்கு, நடுத்தர மக்களும் சொந்த வீட்டில் வாழ்வதற்கு வழிவகை செய்து வருகிறார். உதவும் உள்ளம் கொண்ட தொழிலதிபர் பாபு வெண்ணிலா தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். அவர் கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த வேகமான சமூகத்தில், பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட. வாழை ம.பாபு போன்ற மனிதர்கள் சமுதாயத்தில் போற்றப்பட வேண்டிய வர்கள் தான்.
Leave a Reply