தாக்குப்பிடிக்குமா தவெகா?
ஓர்க் பிரம் ஹோம் அரசியலால் நிர்வாகிகள் அதிருப்தி
—
த.வெ.க. தலைவர் விஜய் இன்னமும் முழுவதுமாக அரசியல் களத்தில் இறங்காதது அவரது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பனையூரில் இருந்தவாறும், சமூக வலைதளம் வாயிலாகவும் மட்டுமே அரசியல் செய்தால், கட்சி எப்படி வளரும் என்று நிர்வாகிகள் குமுறுகின்றர்.
சினிமா நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், திடுதிடுப்பென சினிமாவுக்கு முழுக்கு போட்டு, அரசியலில் இறங்கினார். பிரம்மாண்டமாக மாநாடு நடத்தி கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு பதிலாக, கடந்தாண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, தனது கட்சியின் பெயரைக்கூட டிவிட்டரில்தான் முதன்முதலில் அறிவித்தார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். இத்தனை நாள் போஸ்டர் ஒட்டி, கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ததற்கு பலனாக, கட்சியில் முக்கிய பொறுப்புகளை பெற்று தீவிர அரசியல்வாதி ஆகிவிடலாம் என்று பலரும் கனவுகளில் மிதந்தனர்.
ஆரம்பத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி அறிமுகம், த.வெ.க. பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பனையூர் அலுவலகத்தில் இருந்தபடியே விஜய் மேற்கொண்டார். சரி, கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு முழுவீச்சில் அரசியல் களத்தில் விஜய் குதிப்பார் என்று அவரது கட்சியினர் நம்பிக்கையோடு இருந்தனர்.
இதற்கு மத்தியில், தவெக கொடியை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபரில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடந்த மாநாட்டிற்கு கிடைத்த பிரம்மாண்ட் வரவேற்பால், அவரது கட்சி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஆனால், எல்லாமே கொஞ்ச நாளைக்குதான் என்பது போலாகிவிட்டது விஜயின் அரசியல் செயல்பாடுகள்.
கட்சி மாநாட்டுக்கு பிறகு விஜயின் அரசியல் வேகம் எடுக்கும் என்று கட்சியினரும் ரசிகர்களும் நம்பியிருந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் அரசியல் பயணம் செய்வார்; அரசை எதிர்த்து போராட்டம் அறிவிப்பார், நிர்வாகிகள் நியமனம் தடபுடலாக இருக்கும் என்றெல்லாம் கருதப்பட்ட நிலையில், எல்லாம் புஸ்ஸ்ஸ் என்றாகிவிட்டது. இதனால் த.வெ.க. நிர்வாகிகள் பலர் சோர்ந்துபோயுள்ளனர்.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: 2024ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. அடுத்தாண்டு நடைபெற உள்ல சட்டசபை தேர்தலை நோக்கி தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் பயணிக்க தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வியூகம், கூட்டணி கணக்குகளை போடத் தொடங்கிவிட்டன. எந்த அனுபவமும் இல்லாத விஜய் தனது கட்சி தொடங்கினாலும் களத்திற்கு இன்னமும் வரவில்லை.
தீவிர அரசியலுக்கு வராமல் அவ்வப்போது டிவிட்டரில் பதிவு போட்டு அரசியல் செய்கிறார் விஜய். நமது மக்கள் விவரமானவர்கள். இதையெல்லாம் அவர்கள் ஏற்கமாட்டார்கள். பெஞ்சல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று, விஜய் மாநாடு நடத்திய விழுப்புரம். கடலூர், புதுச்சேரியிலும் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் இருந்தன. திருவண்ணாமலையில் குழந்தைகள் 7 பேர் மண்ணில் புதைந்து இறந்து போனார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், பாஜகவினர் என பலரும் நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், விஜய் என்ன செய்தார்? மழையால் பாதிக்கப்பட்டவர்களை போய் பார்க்கவில்லை. ஒருவேளை வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு விஜய் வந்தால் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்று அவர் கருதி இருந்தால் கட்சியினரையாவது அங்கு அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி இருக்கலாம்.
ஆனால், விஜய் இதிலும் ஒர்க் பிரம் ஹோம் என்ற அரசியலை செய்தார். பாதிக்கப்பட்ட மக்கள் என்று கூறிக்கொண்டு ஒருசிலரை பனையூர் அலுவலகம் அழைத்து வந்து, நிவாரணப் பொருட்களை கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் விஜய். பாதிக்கப்பட்ட தங்கள் வீட்டையும் உடமைகளையும் தண்ணீரில் போட்டுவிட்டு யாராவது நிவாரணப் பொருட்கள் வாங்க பனையூருக்கு வரமுடியுமா? என்பதை விஜய் யோசிக்கவில்லை.
அரசியல் களத்திலும் விஜய் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்; எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. அண்ணாமலை தனக்கு தானே சாட்டையால் அடித்து, ஒரே நாளில் நாடு முழுவதும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தார். பாப்புலாரிட்டி உள்ள விஜயோ கப்சிப் என்று முடங்கிக் கிடக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல், அம்பேத்கர் விவகாரம், விலைவாசி உயர்வு என்று பல பிரச்சினைகள் இருக்க, வெறும் டிவிட்டர் அரசியல் செய்கிறார்; அதுவும் சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு சம்பிரதாயத்திற்கு ஒரு பதிவை போடுகிறார்.
2025ஆம் ஆண்டு வந்துவிட்டது. மற்ற கட்சிகள் சுறுசுறுப்பாக களமிறங்கிவிட்டன. அனுபவம் இல்லாத விஜய், பூத் கமிட்டி அமைப்பது, கட்சி நிர்வாகிகள் நியமனம் என எதையும் கவனித்ததாக தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவா செல்லும் விஜய், மக்கள் பிரச்சினைகளுக்கு களமிறங்கி எந்த போராட்டத்தையும் கூட இதுவரை நடத்தவில்லை.
வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமே வாக்குகளாகிவிடும் என்று மனக்கோட்டை கட்டியிருந்தால் விஜய் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பனையூரை விட்டு நடிகர் விஜய் வெளியே வந்து அரசியல் செய்யாதவரை, அவரது கட்சி நிச்சயம் மக்கள் மன்றத்தில் எடுபடாது. இனியாவது விஜய், பனையூரில் இருந்து வெளியே வந்து தீவிர அரசியலை கையில் எடுத்தால், வரும் தேர்தலில் கொஞ்சமாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
விஜயின் அரசியல் குறித்து, பெயரை குறிப்பிடவிரும்பாத சில த.வெ.க. நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டே வருகிறது. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் மலைபோல் உள்ள நிலையில், அவகாசம் வெகு குறைவாக உள்ளது. அரசியலில் பழம் தின்று கொட்டிய போட்ட கட்சிகளே, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
இன்று பிறந்த குழந்தையான த.வெ.க.வில் முழுவீச்சில் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்ற குற்றாச்சாட்டு உண்மைதான். கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசியலுக்கு புதியவர்கள். எனவே இந்த விஷயத்தில் தலைமைதான் வழிகாட்ட வேண்டும்.
தலைவர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினாலும் இன்னமும் ஒரு படத்தில், அதாவது அவரது கடைசி படத்தில் நடித்து வருகிறார். தை பொங்கலுக்கு பிறகு நிலைமை மாறும் என்று நம்புகிறோம். விஜய் களமிறங்கினால் எல்லாம் சரியாகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களின் குமுறல் விஜய் கட்சிக்கு போயிருப்பதாக சொல்கிறார்கள். ஜனவரி 4ஆவது வாரத்திற்குள் கட்சி நிர்வாகிகளை அறிவித்துவிட்டு பிப்ரவரியில் இருந்து தீவிர அரசியலில் விஜய் இறங்க்குவார் என்று த.வெ.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது. அப்படி களமிறங்கினால் மட்டுமே வரும் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு விஜயால் சவாலை தர முடியும். இல்லாவிட்டால், பத்தோடு பதினொன்றாக த.வெ.க. மாறிவிடும் என்பதை விஜய் உணர வேண்டும்.

Leave a Reply