நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 18 இளநிலை படிப்புகளும் 15 முதுநிலை படிப்புகளும் உள்ளது. இங்கு 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 2024 மற்றும் 25ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பட்டப்படிப்பு 3 கட்ட கலந்தாய்வுகள் முடிந்துவிட்டது. அரசு கல்லூரியில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்க பட்டுள்ளதால் தற்போது ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 1300 இடங்களாக அதிகரித்து உள்ளது. இதில் 80 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள 20 சதவீத இடங்கள் இன சுழற்சி அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளது. எனவே தகுதியான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயன்படலாம் என ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராமலட்சுமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2024, 25ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு ஏற்கனவே டிஎன்ஜிஏஎஸ்ஏ (ஜிழிGASA) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் வரும் 23ந் தேதியன்று 9.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த. வாய்ப்பினை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம். மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், அன்றைய தினம் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து உரிய கட்டணத்தை செலுத்தி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இன சுழற்சி மாறுதல் அடிப்படையில் ஊட்டி அரசு கலை கல்லூரியில் உள்ள தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், வணிகவியல் (சிஏ.,), வணிகவியல் (ஐபி.,), இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், தாவரவியல், விலங்கியல், வனவிலங்கு, உயிரியல், புவியமைப்பியல், கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய 18 துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கலந்தாய்விற்கு வரும்போது 10,11,12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல்பக்கம் என அசல் மற்றும் 6 நகல்கள் எடுத்து வர வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 எடுத்து வர வேண்டும். கட்டண விகிதம் மாநில பாடத்திட்டம் ரூ.4500 ரும், இதர பாட திட்டம் ரூ.5000 ஆகும்.

Leave a Reply