24 மணிநேரத்தில் தாக்குதல்: அலறும் பாகிஸ்தான்

Spread the love

இந்தியா வரும் 24 முதல் 36 மணி நேரத்துக்குள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அத்தாஉல்லா தரார் தெரிவித்தார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது, “இந்தியா தாக்குதல் நடத்தும் திட்டம் தீட்டியுள்ளது என்ற நம்பகமான உளவுத்தகவல்கள் எங்களிடம் உள்ளன. இந்தியா தானே குற்றச்சாட்டு எழுப்பி, விசாரணை நடத்தி, தண்டனையும் விதிக்கிறது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது,” என்றார்.

பாகிஸ்தான் எந்தவித பயங்கரவாதத்துக்கும் ஆதரவளிப்பதில்லை என்றும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குழு அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், இந்தியா எந்தவித விசாரணைக்கும் ஒத்துழைக்க விருப்பம் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கை பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தருணத்தில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.. இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ (TRF) பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் ISI அமைப்பு ஆதரவு வழங்குகிறது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்திய ராணுவத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவை குற்றம் சாட்டி சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது என வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலைமை இரு அணுஆயுத நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.