24வது முறை… இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் பேச்சு

donald trump
Spread the love

 

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 24வது முறையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு கடந்த 18ம் தேதிஇரவு விருந்து அளித்தார். அப்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதில் முன்னும் பின்னுமாக இருந்தன. அது பெரிதாகிக்கொண்டே இருந்தது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்வீர்கள் எனில், குறிப்பாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் உங்களுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினேன். ஏனெனில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த அணுஆயுத நாடுகள். 8 ஆண்டுகளில் எந்த அமெரிக்க நிர்வாகமும் சாதிக்க முடியாததை ஆறு மாதங்களில் நாங்கள் சாதித்துள்ளோம். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம்” என பேசினார்

போர் தீவிரமடைந்த நிலையில், இந்திய டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் டிஜிஎம்ஓ அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று இந்தியா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மத்திய அரசு அறிவித்தது.எனினும் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு நானே காரணம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் மெளனம் குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், “மே 10 முதல் இன்று வரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 24 முறை ’இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தினேன்’ என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இப்போது அவர் ஐந்து போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என புதிதாக ஒன்றையும் கூறியுள்ளார்.

வரும் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸும் முழு எதிர்க்கட்சியினரும் சிறப்பு விவாதத்தைக் கோருவர். அதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.