22 நாள் பச்சிளங்குழந்தைக்கு மூளையில் அரிய சிகிச்சை
கோவை,; பிறந்து 22 நாட்களே ஆன குழந்தைக்கு, மூளையில் சிறுதுளை அறுவை சிகிச்சையை, கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவ குழுவினர், வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் கூறியதாவது:
பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, தலை 33 முதல் 35 செ.மீ., இருக்க வேண்டும். இக்குழந்தைக்கு, மூளையில் உள்ள திரவம் எளிதாக, முகுது தண்டுவடத்திற்கு சென்று வருவதில் அடைப்பு இருந்தது. இச்சிக்கலால், தலையின் அளவு பெரிதாக இருந்தது.
குழந்தை குறைபிரசவத்தில், 29வது வாரத்தில் 1200 கிராம் எடையுடன், ‘ஜெர்மினல் மேட்ரிக்ஸ்’ எனப்படும் அறிகுறியுடன் பிறந்தது. இதனால், மூளையில் உள்ள திரவம் எளிதாக சென்றுவர, சிறிய துளை வழியாக அறுவை சிகிச்சை செய்து, வழியை உருவாகியுள்ளோம்.
இச்சிகிச்சை, இ.டி.வி., என்று கூறப்படும். அறுவைசிகிச்சைக்கு பிறகு குழந்தை தாய்ப்பால் குடிக்கிறது. பிரேசிலில், 25 நாட்களான 1850 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு இ.டி.வி., சிகிச்சை அளித்ததே, உலக சாதனையாக இருந்தது. இச்சாதனையை, கே.ஜி. மருத்துவமனை மருத்துவக்குழுவினர் முறியடித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இக்குழுவில் இடம் பெற்ற, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார், நரம்பியல் நிபுணர் ராமகிருஷ்ணன், குழந்தை மருத்துவர் ஸ்ரீனிவாசன், மயக்க மருந்து நிபுணர் செல்வக்குமார் ஆகியோரை, அவர்
பாராட்டினார்.
Leave a Reply