elections
Spread the love

ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்த லுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கும் என நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,
மத்திய பிரதேசம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வலுவான செல்வாக்குடன் இருப்பதால், அருதிப் பெரும்பான்மை இடங்கள் இந்த மாநிலங்கள் மூலம் கடந்த 2014,2019 ஆகிய இரண்டு தேர்தல்களின் வாயிலாக பெற்றதனால், பாரதிய ஜனதா மேற்கண்ட மாநிலங்களில் அனைத்து இடங்களில் போட்டியிடுகிறது.
தனித்து போட்டி
ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறது பாரதிய ஜனதா. பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் பாஜக தனியாக,போட்டியிடுகிறது.
இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப இடங்களை மட்டுமே மாநில கட்சிகள் ஒதுக்கியுள்ளன.
மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ், இண்டியா கூட்டணியி லிருந்து விலகி 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் தனியாக களம் காண்கிறது.
இண்டியா கூட்டணியில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் அக் கூட்டணி பலவீனமாக காணப் படுகிறது.
இதனால் சில மாநிலங்களில் உற்சாகம் இல்லாமல், தேர்தல் பணிகள் நடந்து வருகிறது.
சூறாவளி பிரச்சாரம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி,அதிமுக தலைமை யிலான கூட்டணி, முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டியில் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் உள்ளனர்.
திமுக தரப்பில் சிட்டிங் எம்பிக் கள் டிஆர் பாலு,கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ஆ. ராசா,தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும், பெரம்பலூரில் அமைச்சர் நேரு மகன் அருண், தஞ்சையில் முரசொலி, ஈரோடு பிரகாஷ், கோவையில் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சியில் ஈஸ்வர சாமி உள்ளிட்ட புதிய முகங்களும் களம் கண்டு வருகிறார்கள்.
இக்கூட்டணியில் திருச்சியில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாரிசும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ போட்டியில் உள்ளார்.அவருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டி
அதிமுக தரப்பில் தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் உள்ளிட்டோர் என 33 தொகுதிகளில் எதிரணிகளுக்கு போட்டியினை ஏற்படுத்தி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர ராஜன், பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், நடிகை ராதிகா சரத்குமார், உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள், திமுக,அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு கடும் போட்டியினை ஏற்படுத்தி வருகின்றனர்.
40/40
தேர்தல் அறிவிப்புக்கு முன்பும்,அதனைத் தொடர்ந்து சில நாட்களும் திமுக தரப்பில் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 40 – க்கு 40 என்ற முழக்கத்தை கூறி வந்தனர்.
ஆனால் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு தரப்பில் பல தொகுதிகளில் கடுமையான போட்டியை அளித்து வருகின்றனர். இதனால் அந்த முழக்கம் தற்போது பிரச்சாரங்களில் காண முடிவதில்லை.
அதிமுக, திமுக கட்சிகளின் கணிசமான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட காரணங்களால் கடும் போட்டி நிலவி வருகிறது.
நன்கு அறிமுகம்தென் சென்னை தொகுதியில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்க
பாண்டியனுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், அத்தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கனவே எம்பியாக இருந்த ஜெயவர்தன் இம்முறையும் போட்டியில் உள்ளார்.
நன்கு அறிமுகமான வேட்பாளராக இருப்பதாலும், அதிமுகவிற்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாலும் போட்டி பலமாக காணப்படுகிறது .
மேலும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 40 ஆண்டு காலமாக இத்தொகுதியில் வசிப்பதாலும், 20 ஆண்டு காலம் கிளினிக் நடத்தி ரூ.100 -க்கு மருத்துவம் பார்த்தது என, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் நன்கு அறிமுகம் உள்ளதாலும், மூவருக்கும் இடையே போட்டிக்கு பஞ்சம் இல்லை.
ராசாவுக்கு நெருக்கடி
மலைகளின் ராணியான நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா தான் நிரந்தர எம் பி என திமுகவினர் பேசி வந்தனர். ஆனால் அங்கு நிலைமை வேறாக உள்ளது.
பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல். முருகன் கடந்த ஆறு மாத காலமாக அங்கு களப்பணி செய்து, வாக்
காளர்களை தன் பால் ஈர்த்து வைத்துள்ளார்.மேலும்பாஜக களப்பணியாளர்களும் தீவிரத் தேர்தல் பணியில் உள்ளனர். இந்துக்களுக்கு எதிராக ஆ. ராசா கடந்த காலங்களில் பேசிய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பாஜகவின ரால் அதிகம் பகிரப்பட்டு வருவதால் சிட்டிங் எம்பி ராசாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு
அனைவராலும் எதிர்பார்க் கப்படும் கோவை தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.
“நாங்கள் எதிர்க்கும் அளவிற்கு பாஜக வேட்பாளர் தகுதியானவர் இல்லை “-என தொழில்துறை அமைச்சரும், கோவை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான டிஆர்பி ராஜா தெரிவித்து வருகிறார்.
கூட்டணி கட்சிகளின் பலம், தேர்தல் பணிகளில் அனுபவம்,ஆளும் கட்சி உள்ளிட்ட
வைகளால்,திமுக தரப்பு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து வந்தவருக்கு எம்பி சீட்டா என கேள்வி எழுப்பிய சீனியர் திமுகவினர் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள தொடங்கியுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இத்தேர்தலில் இதுவரை முழுமையாக ஆர்வம் காட்டவில்லை.
தொகுதியில் உள்ள 6 சட்டமன்றங்களிலும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
இக்கூட்டங்களில் எல்லாம், கூட்டணி கட்சியினர் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டு தங்களின் பலத்தினை காட்டியுள்ளனர்.
என்றாலும் ஆளும் என்ற சாதகமான சூழலால் வெற்றியை எளிதில் கைப்பற்றலாம் என்ற திமுக தரப்பினரின் எதிர்பார்ப்பு, அவர்களுக்கு எதிர்மறையாக களத்தில் உள்ளது.
பாஜக மீது தாக்குதல்

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலையை மட்டும் விமர்சித்து வருகிறார்.
அதிமுகவின் பிரதான எதிர்க்கட்சியான திமுக பற்றி ஏன் பேசுவதில்லை என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுகிறது.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை இங்கு யாரும் நுழைந்து விடக் கூடாது என, தேர்தல் பணிகளில் அதிக அனுபவம் வாய்ந்த அதிமுக களப்பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் அதிகப்படியான ஆதரவு இருப்பதால், அதிக ஓட்டுக்களை வாங்கி காட்ட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் தேர்தல் பணிகளில்
ஜரூராக வேலை செய்து வருகின்றனர்.
திமுக, அதிமுக வாக்கு வங்கிகளை உடைத்து, தம் பக்கம் திருப்பிக் கொள்ள இத்தேர்தல் வாய்ப்பாக உள்ளது என பாஜகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேகமில்லை
ஏ தரப்பு வாக்காளர்களின் ஓட்டுக்கள் உறுதியாக பாஜக பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் உள்ளனர்.
என்றாலும் சாமானியர் களிடம்,பாஜகவினர் இன்னும் செல்லவில்லை.
அந்த ஓட்டுக்களை தம் பக்கம் திருப்பினால் மட்டுமே, பாஜகவினரின் எண்ணம் நிறைவேறும்.
மேலும் கடந்த கால தேர்தல் களில்,கூட்டணி கட்சிகளின் பலத்தால் பாஜகவினர் தேர்தலை சந்தித்ததால், பூத் கமிட்டி, வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்தல் போன்ற தேர்தலின் நுட்பமான பணிகளில் சில பகுதிகளில் தேர்தல் பணிகள் நடைபெறாத சூழலும் உள்ளது.
மும்முனைப் போட்டி கடுமையாக உள்ள கோவை தொகுதியில், திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறிப்பது எளிதானதாக இருக்காது என்பதே தற்போதைய கள எதார்த்தமாக உள்ளது.