​2026 ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதலமைச்சராக அமர்வார் – கோவையில் செங்கோட்டையன் உறுதி

Spread the love
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் மற்றும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்தார். “எம்.ஜி.ஆர். என்னை ஒருநாளில் அடையாளம் காட்டினார். இன்று மக்கள் சக்தியாக உருவெடுத்திருக்கும் விஜய் நாளைய முதல்வர். 2026 ஆம் ஆண்டில் விஜய் தமிழக முதலமைச்சராக அமர்வார்; அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மாற்றுச் சக்தியை உருவாக்கும் நோக்கில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், புனித ஆட்சியை ஏற்படுத்தும் துணிச்சலுடன் புதிய அரசியல் பாதையில் விஜய் நடந்து வருகிறார் என்றும் செங்கோட்டையன் கூறினார். அந்த வழியில் நானும் இணைந்து பயணிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

“இரண்டு ஆட்சிகளையும் மாற்ற மக்கள் விரும்புகிறார்கள்,” என கூறிய அவர், கோவையில் தன்னை வரவேற்க பலர் நான்கு மணி நேரம் காத்திருந்ததை நினைவுகூர்ந்தார். “நான் ஒரு எளிய தொண்டன் மட்டுமே,” என்றார்.

“ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். என் பின்னால் மக்கள் உறுதியாக நிற்கிறார்கள்,” என்ற செங்கோட்டையன், விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதாகவும் குறிப்பிட்டார்.