பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை 5 மணி முதல் ஹோமம், ஆரத்தி, பூஜை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பஜனைக்குழு, பாலமலை அரங்கநாதர் பஜனை குழு, தண்டபாணி நாம சங்க கீர்த்தனை குழுவினரின் பஜனை, மேட்டுப்பாளையம் ஸ்ரீ வாசுதேவன் குழுவினரின் பஜனை, சுவாமி ஹரிவ்ரதானந்தரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
.இதனையடுத்து காலை 7 மணி அளவில் வித்யாலய கொடியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தினுடைய தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் ஏற்றி வைத்து விழாவினை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 8 மணி அளவில் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் சுயநதிப் பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்ட கலை மற்றும் கல்விப் பொருட்காட்சியை சுவாமி சத்யஞானானந்தர் மற்றும் மதுரை மடத்தின் தலைவர் சுவாமி நித்யதீபானந்தர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து மாணவர்களின் படைப்புக்களை பார்வையிட்டனர். பின்னர் முதன்மை விழா பந்தலில் பொருட்காட்சி துவக்க விழாவில் குருபூஜையையொட்டி மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு மதுரை மடத்தின் தலைவர் சுவாமி நித்யதீபானந்தர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். தொடர்த்து விழா பேருரையாற்றிய சுவாமி நித்யதீபானந்த
ர் இந்திய இளைஞர்கள் அறிவியல்,விண்வெளி, மென்பொருள்,கணிதம், செயற்கை நுண்ணறிவு துறைகளில் இன்னும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும்
எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தினுடைய தலைவர் சுவாமி சத்யஞானானந்தர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சுவாமி சிவானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசபக்தி நாடகமும் , தி.அ.தி கலாநிலைய பள்ளி மாணவ மாணவிகளின் ஆண்டாள் என்ற நாட்டிய நாடகமும் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பிற்பகல் நடந்த பொதுக் கூட்டத்தில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர்’ என்ற தலைப்பில் சுவாமி சத்யஞானானந்தர் குருபூஜை பற்றியும், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் விளக்கி சிறந்த வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள உறுதுணையாக இருக்கும் ராமகிருஷ்ணரின் போதனைகளை மாணவர்களும், மக்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து “பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண அவதாரத்தின் உட்கருத்து” என்ற தலைப்பில் சுவாமி நித்யதீபானந்தர் பேசினார். “சுவாமி விவேகானந்தரும் நூறு இளைஞர்களும்” என்ற தலைப்பில் பேசிய தென்காசி டி.கணேசன்
உலகின் அறிவுக் களஞ்சியமாக இந்தியா உருவாகி உள்ளதையும் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எவ்விதம் உதவியுள்ளது என்பதை விளக்கிய அவர் நம் தாய் நாடான இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாலை 6மணியளவில் திருவனந்தபுரம் என்.ஜே நந்தினி குழுவினரின் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நிகழ்வாக இரவு 8 மணியளவில் ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.
விழாவையொட்டி வித்யாலயா வரலாற்று புகைப்பட கண்காட்சி, ஸ்ரீராமகிருஷ்ண இயக்க புத்தகக் கண்காட்சி, ராமாயண தீம் பார்க் நிகழ்வுகள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வித்யாலய முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் என 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் ராமகிருஷ்ண வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில் மாணவர்களும் ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
Leave a Reply