ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Spread the love

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் பதாகை வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
பொது மக்களிடையே பக்கவாதம் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் கே. அசோகன் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது: “பக்கவாதம் ஏற்பட்டாலோ அல்லது ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகமாக இருப்பின், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது மிக அவசியம். ஒவ்வொரு நிமிட தாமதமும் மூளையின் நரம்பு செல்களை பெருமளவில் சேதப்படுத்தும். எனவே அறிகுறிகளைத் தாமதமின்றி கவனித்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் உயிர் காக்கும்” என்றார்.
இதையடுத்து, நரம்பியல் மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை துறையினைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவான டாக்டர் கே. அருணா தேவி, டாக்டர் என். வேதநாயகம், மூத்த நரம்பு அறுவை நிபுணர் டாக்டர் எம். விக்ரம், டாக்டர் பி. திவ்யா மற்றும் டாக்டர் பி. முத்துராஜன் ஆகியோர் பக்கவாதத்தின் அறிகுறிகள், அவசர சிகிச்சை, புனரமைப்பு மற்றும் நோய் தடுப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கினர்.
பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து அவர்கள் கூறியதாவது:
முகத்தின் ஒரு பக்கத்தில் சோர்வுத் தோற்றம், கை அல்லது காலை உயர்த்த சிரமம், பேச்சு தெளிவாக வராமல் குழப்பம் ஏற்படும் நிலை போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். “ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம்” என வலியுறுத்தினர்.
மேலும், பக்கவாதத்தைக் குறைக்கும் முக்கிய தடுப்பு வழிமுறைகளாக, இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொழுப்பு அளவு போன்றவற்றை சீராக பரிசோதித்தல், சத்தான உணவு, தினசரி உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் மதுபானத்தைத் தவிர்த்தல், மன அழுத்தம் குறைத்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் பரிந்துரைக்கப்பட்டன.
நிகழ்வில் தலைமை செயல் அதிகாரி சி. வி. ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், நிர்வாக அதிகாரி டி. மகேஷ் குமார் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பனும் கலந்து கொண்டனர். நிகழ்வு நிறைவில் பக்கவாத விழிப்புணர்வு பதாகை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.