ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Spread the love
கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை, கணினி அறிவியல் துறை ஆகியவை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவல்தொடர்புத் துறையுடன் 09.08.2025 (சனிக்கிழமை) இன்று கல்லூரியின் கலையரங்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் எஸ்.நரேந்திரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி அவர்கள் பேசியதாவது, ஆராய்ச்சிகளை யாரும் தனியாக செய்யமுடியாது. ஒரு நல்ல ஆராய்ச்சியானது கூட்டு இணைப்பால் மட்டுமே நிகழும். கல்வி நிறுவனங்களுடனோ, தொழில் நிறுவனங்களுடனோ இணைந்து ஆராய்ச்சிகளை செய்யும்போது புதுமையான, பயனுள்ள ஆய்வு முடிவுகளைப் பெற முடியும். ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவிகளை அரசு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களின் மூலம் பெற்று சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டால் கல்வித்தரம் நிச்சயம் உயரும் என்றார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத்துறை, கணினி அறிவியல் துறை ஆகியவை அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவல்தொடர்புத் துறையுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல், கணினி அறிவியல், உயிரி தகவல் தொழில்நுட்பவியல், கட்டமைப்பு உயிரியல், அடிப்படை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சிகளை நிதி நிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்கள் இணைந்து முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், இடைநிலைப் பயிற்சிகள் (இன்டர்ன்ஷிப்) ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப்பட்டறை, குறைந்தகால புத்தாக்கப் பயிற்சிகள், குறுகிய கால மற்றும் நீண்ட கால மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர்கள் இரு நிறுவனங்களிடையே தேர்வாளர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதனோடு இரு நிறுவனப் பேராசிரியர்களும், மாணவர்களும் நூலகம் மற்றும் அறிவுப் பகிர்வில் பரிமாற்றம் செய்து கொள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் எஸ். ரத்தீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.