கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் எம்.கருப்புசாமி வரவேற்றார்.
தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் எம்.பர்குணன், விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் பேண்டு வாத்திய இசைக்குழு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தினவிழா உரையாற்றினார். தொடர்ந்து சுதந்திர தின விழா சிறப்பு முகாம், தேசிய ஒருமைப் பாட்டு முகாமில் பங்கேற்றவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவி த.திரிஷா, தேசிய மாணவர் படை மாணவர் எஸ்.நிதீஷ் ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ஈ.விவேக், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் பேரவை இணைச் செயலர் ஜி.தர்ஷன் நன்றி கூறினார்.
Leave a Reply