கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கோவை மாநகரக் காவல் இணைந்து நடத்திய, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, இணையக் குற்றங்கள் பற்றி விளக்கினார்.
கோவை மாநகரக் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “இணையப் பாதுகாப்பு” இதழை வெளியிட்டு பேசியதாவது, “இணையக் குற்றங்களால் இன்று பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அதை நிறுத்தி விட்டு, கல்வியறிவை பெற்றுக் கொண்டு, இணையக் குற்றவாளிகளாக மாறிவிட்டனர்.
இதன் விளைவாக கடந்த 2022-ம் ஆண்டில் இணைய மோசடியில் ரூ.3 கோடியும், 2023-ம் ஆண்டில் ரூ.45 கோடியும், 2024-ம் ஆண்டில் ரூ.97 கோடியும் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதைப் பற்றி நாம் இன்று விவாதிக்க வேண்டியுள்ளது.
பார்சல் மோசடியில் கோவையில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பார்சலில் போதைப்பொருள் வந்துள்ளது, ஆதார் எண், செல்போன் எண் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் பெயரில், போலி வேலைவாய்ப்புகள் வழங்கி ஏமாற்றி வருகின்றனர். அதில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விடுபட முடியாமல் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டறிய முடியாத இணையதளங்கள் மூலமாக மோசடிகள் பெருகி வருகின்றன. இதிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, கல்லூரி மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பி.ஏ. அருண், இணைய பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
முன்னதாக மாணவ, மாணவிகளின் இணைய பாதுகாப்பு குறித்த கவிதை வாசிப்பு, மௌன நாடகம், முக ஓவியம் வரைதல், குறும்படம், வினாடி-வினா, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் நன்றி கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Leave a Reply