கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகவியல் துறையும் வணிகவியல் துறையும் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான மேக்னிஃபிகோ நிகழ்ச்சியை நடத்தினர்.
க்ரீன் எரா ரிசைக்கிளர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் பங்குதாரருமான பிரசாந்த் ஓமனகுட்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, நாம் வாழும் இந்தப் பூமி நிலையான வளர்ச்சியடைய வேண்டுமானால் மக்கள் வாழ்க்கை, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார லாபம் என அனைத்திற்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார். வளர்ச்சிப்பாதையில் நாம் நடைபோடும்போது அதிகரித்துவரும் மின்னணுக் கழிவுகளைத் திறம்படக் கையாள்வது சவாலானது என்று கூறிய அவர், அத்தகைய சவாலை எதிர்கொள்ள புதுமையானதும் நிலையானதுமான மறுசுழற்சி முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாகக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா பேசும்போது கல்லூரிகளுக்கு இடையிலான இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் பிறரோடு பழகுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றல் போன்றவற்றை வளர்த்துக்கொள்ள முடியும்.
தனிவாழ்விலும் தொழில்முறையிலும் மாணவிகள் சிறந்து விளங்க இத்தகைய வாழ்வியல் திறன்கள் பெரிதும் துணைநிற்கும் என்றார். வணிகம் மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த பல்வேறு போட்டிகளில் மாணவிகள் தங்கள் படைப்பாற்றலையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர். லோகோ வடிவமைத்தல், மைண்ட் மாரத்தான், பட்ஜெட்லெஸ் பொனான்ஸா, கார்ப்பரேட் வாக் உள்ளிட்ட சுவாரஸ்யமான போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மேக்னிஃபிகோ நிகழ்ச்சி



Leave a Reply