ஶ்ரீ திருமலைராயர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

Spread the love

பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள ஶ்ரீதேவி பூதேவி மேத திருமலைராயப்பெருமாள் திருக்கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் கோவை, நீலகிரி, ஈரோடு,திருப்பூர் மாவட்டங்களில் வசிக்கும் பகடி கத்துலு குலத்தாருக்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான ஶ்ரீதிருமலை ராயப்பெருமாள் கோவில் காளிபாளையத்தில் அமைந்துள்ளது.இக்கோவிலில் புனராவர்த்தன திருப்பணிகள் நடைபெற்று வந்தன.பணிகள் நிறைவடைந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலின் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்கு காளிபாளையம் ஊர்கவுண்டர் தங்கவேலு முன்னிலை வகித்தார்.

புதன்கிழமை மாலை 5 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கின.முதலில் கன்னிமார் மற்றும் கருப்பராயர் கோவிலிருந்து முளைப்பாலிகைகள்,புண்ணிய நதிகளின் தீர்த்தக்குடங்கள் மற்றும் கோபுரக்கலசம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.தொடர்ந்து வாஸ்துசாந்தி,மூத்த பிள்ளையார் வழிபாடு,விஷ்வக்சேனர் வழிபாடு,சகலதேவதா அனுக்ஞை,அங்குரார்ப்பணம்,நவக்கிரக ஹோமம்,திவ்யப் பிரபந்த பாராயணம் அருளிச் செய்தல்,யந்திர ஸ்தாபனம்,அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல்,கோபுர கலசம் பிரதிஷ்டை ஆகியன நடைபெற்றன.இதனையடுத்து வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சுப்ரபாதத்துடன் தொடங்கிய இரண்டாம்கால யாக வேள்வியில் பஞ்ச சுக்த ஹோமம்,ஶ்ரீ நாராயண மூலமந்தர ஹோமம்,108 மூலிகை திரவியாஹூத,ஶ்ரீ வீர அனுமன் ஹோமம்,ஶ்ரீகிருஷ்ண ஆவரண பூஜை,ஜயாதி ஹோமம்,மகா பூர்ணாஹூதி,நாடிசந்தானம்,தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர் புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய தீர்த்தக் குடங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.கவுண்டம்பாளையத்திலுள்ள ஶ்ரீ வாராஹி மந்த்ராலய பீடாதிபதி சாக்த ஶ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்து கோபுரக் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்.தொடர்ந்து மூலவர் ஶ்ரீதேவி பூதேவி மேத திருமலைராயப்பெருமாள், ஶ்ரீ ஆண்டாள்,ஶ்ரீ கிருஷ்ணர்,ஶ்ரீவீரஅனுமன் ,நாகர்களுக்கும் சர்வ அபிஷேகங்கள் நடைபெற்றன.

யாகசாலை வேள்விகளை ஆத்மசாதகர் முரளி சங்கர் சுவாமிகள்,பூஜாகர்த்தா செந்தில்குமார்,வினோத் மற்றும் ஶ்ரீ வாராஹி மந்தராலயக் குழுவினர் மேற்கொண்டனர்.தொடர்ந்து மஹா அலங்காரம்,தீபாராதனை,அன்னதானம் ஆகியன நடைபெற்றன.கும்பாபிஷேக விழாவினை கோடையிடி பீஷ்மாச்சாரியார் சுவாமிகள் தொகுத்து வழங்கினார்.விழாவில் முக்கிய பிரமுகர்கள்,சுற்றுவட்டார கிராமத்தினர்,திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.