வைஸ்யால் வீதி முதல் கத்தார் வரை… சாதனைகளின் நாயகன் அரோமா ஆர். பொன்னுசாமி

Spread the love

தென்மாநிலங்களில் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட பிராண்டுகளில் அரோமா தயாரிப்புகள் முதன்மையானது. கோயம்புத்தூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வைஸ்யாள் வீதியில், ஒரு சிறிய கடை வாடகை கடையில்தான் இந்த நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியது. அரோமா ஆர். பொன்னுசாமியின் என்ற தொழில் முனைவோரின் முதல் முகவரி அது. முதலில் டீக்கடையை தொடங்கினார். பின்னர், வைஸ்யாள் வீதியில் கடும் முயற்சியின் மூலம் 100 சதுர அடி இடத்தில் ஸ்ரீமகாலஷ்மி பேக்கரியை 1973-ம் ஆண்டு தொடங்கினார். அங்கு, தரமான டீ, காபியுடன், ரொட்டி, பிஸ்கட், வர்க்கி போன்றவையும் விற்கப்பட்டது . முதலில் வாடிக்கையாளர்கள் அமர நல்ல சேர், டேபிள் போட்டு, ஈக்கள் மொய்க்காதபடி சுத்தமான சூழ்நிலை உருவாக்கி வாடிக்கையாளர்களை தன் பக்கத்தில் கவர்ந்தார். அப்போது, ஒரு டீயை 10 பைசாவுக்குதான் கொடுத்துள்ளார். விலை குறைவாகவும், பொருள் தரமான தாகவும் இருந்ததால், சில மாதங்களிலேயே கடை பிரபலமடைந்த, 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியது.மக்களின் வரவேற்பையும், தேவை யையும் அறிந்து, 6 மாதங்களுக்கு ஒருகடை என, பல இடங்களில் புதிதாக `அரோமா’ பேக்கரிகள் தொடங்கப்பட்டன. தற்போது கோவை மாவட்டம் முழுவதும் ஏராளமான அரோமா பேக்கரிகள் உலகத் தரம் வாய்ந்த, நவீன வசதிகளுடன் செயல்படுகின்றன.

1994-ம் பெங்களூருவில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் தயாரிக்கும் முறையை அறிந்துள்ளார். ரூ.17 ஆயிரம் மதிப்பில், பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்கும் எளிய இயந்திரத்தை சொந்த முயற்சியில் வடிவமைத்து, தினமும் 300 லிட்டர் பாக்கெட் பால் தயாரித்து சாதித்தார். கடந்த 2010 முதல் இவரது ஸ்ரீமஹாலஷ்மி டெய்ரி நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், பால் பவுடர், கோவா, பன்னீர், பால் க்ரீம், ரோஸ் மில்க், லஸ்சி என நிறைய பொருட்களைத் தயாரிக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாகவும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலமாகவும் தற்போது ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் தரமான பாலை அரோமா நிறுவனம் உற்பத்தி செய்கிறது. தற்போது, ஸ்ரீமகாலஷ்மி டெய்ரி, இன்று நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் என கடல் கடந்தும் விற்பனைத் தளத்தை, பன்னாட்டு நிறுவனங் களுக்கு இணையாக விரிவுபடுத்தியுள்ளது. அரோமா பேக்கரியின் தொடர்ச்சியாக, அரோமா ஃபுட் கோர்ட் என்ற பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. அரோமா `க்ரீன் ட்ரீ’ என்ற பல்பொருள் அங்காடியும் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரேகூரையின் கீழ் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம்.

இப்படி பல சாதனைகளை படைத்த அரேமா ஆர். பொன்னுசாமிக்கு தமிழக அரசு சிறந்த தொழில்முனைவோர் விருது வழங்கியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரசித்தி பெற்ற `யுனிவர்சிட்டோ பாப்புலாரே டெக்லி ஸ்டெடி டி மிலனோ’ பல்கலைக்கழகம், பால் வளத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கையால் `’வாழ்நாள் சாதனையாளர்’ விருதையும் அரோமா ஆர். பொன்னுசாமி பெற்றுள்ளார்.