பா.ஜ.க அரசை கடுமையாக கண்டித்த திருமாவளவன்

thirumavalavan
Spread the love

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் “ஜனநாயகம் காப்போம்” கருத்தரங்கம், மாணவர் பாராளுமன்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Waqf திருத்த சட்ட மசோதா, இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்களை அவர்களுக்கே அதிகாரம் இல்லாமல், பிற சமுதாய உறுப்பினர்களை Waqf வாரியத்தில் சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு, இது முற்றிலும் பாசிச, அடாவடி செயல் எனக் கண்டனம் தெரிவித்தார். இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேபோல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது, மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் நடவடிக்கையாக அமையும் என்றார். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் இத்தகைய சட்டத்திற்கு எதிராக திட்டவட்டமான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றமே அவரது செயலை சட்ட விரோதமானது எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார். பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்தது ஜனநாயக எதிர்ப்பு செயலாகும். இதற்கெதிராக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்திற்கே ஒரு ஒளிவிளக்காக இருப்பதுடன், தமிழக அரசுக்கும் மக்கள் இயக்கத்துக்கும் ஒரு வெற்றியாகும் என்றார்.

ஆளுநர் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும் என்றாலும், அவர் விலகவைக்கும் நிலை இல்லை என்பதால், குடியரசுத் தலைவர் தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து அவர் பேசும்போது, இந்த கூட்டணி முற்றிலும் பா.ஜ.க சார்பாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். அதிமுக தலைமையேற்ற கூட்டணியல்ல. பத்திரிக்கையாளர் கூட்டத்தையும், கூட்டணியின் அறிவிப்பையும் பா.ஜ.க தான் செய்துள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என்றும், மக்கள் ஏற்கனவே புறக்கணித்த கூட்டணியே மீண்டும் உருவாகிறது என்றும் விமர்சித்தார்.

செல்லூர் ராஜூ கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழும்ப, அதிமுகவிற்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதை இது வெளிக்காட்டுகிறது எனத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.கவுடன் கூட்டணி என்றால் வெளியேறுவேன் எனத் தெரிவித்ததை நினைவுபடுத்திய அவர், இந்த சூழலில் பா.ஜ.க அதிமுக மீது அழுத்தம் தரும் வகையிலே கூட்டணி அமைத்திருக்கிறது எனக் கூறினார்.

பொள்ளாச்சியில் மாணவிக்கு வெளியே அமர வைத்துப் பரிட்சை எழுத வைத்த சம்பவம் குறித்து அவர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார் என்றும், விடுதலை சிறுத்தைகள் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, சிறுபான்மையினரின் வாக்குகள் பா.ஜ.க கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பா.ஜ.க கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரின் ஆதரவை நாடாத கட்சியாக இருக்கிறது. இப்படி ஒரு கட்சியுடன் அதிமுக கூட்டணி சேருவது சிறுபான்மையினரின் நம்பிக்கையை குறைக்கும் என்று கருத்து தெரிவித்தார்.