தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சீர்கேடு, விவசாயிகள் படும் துயரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில், “விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல் மழையில் நனைந்து முளைத்தும், அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது. விவசாயிகள் படும் துயரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, திமுக அரசு கோமாளித்தனமாக செயல்படுகிறது. இது ‘ஃபெயிலியர் மாடல்’ திமுக அரசின் முகத்தை வெளிப்படுத்துகிறது,” என அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொள்முதல் நிலையங்கள் தாமதமின்றி செயல்பட்டதாகவும், தற்போது டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் தாமதம் மற்றும் சேமிப்பு வசதி இல்லாததால், விவசாயிகள் நஷ்டமடைவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “நெல் கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு திட்டமின்மை, அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மத்திய அரசை குறைசொல்லும் அமைச்சர்களின் இரட்டை நிலைப்பாடு — இவை அனைத்தும் திமுக அரசின் தோல்வியை வெளிக்காட்டுகிறது. மழையில் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி மேலும், “அரசு அலுவலர்கள் டெல்டா பகுதிகளில் தற்போது ஆய்வு மேற்கொள்வது, விவசாயிகள் துயரம் வெளிப்பட்ட பிறகே. விவசாயிகளிடமிருந்து நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய முடியாத அரசாக திமுக மாறியுள்ளது. இத்தகைய அலட்சிய அரசை மக்கள் கண்டிப்பார்கள்,” எனவும் தெரிவித்தார்.
இறுதியாக, “விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்து, முளைவிட்ட நெல் மற்றும் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,” என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.



Leave a Reply