இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, (61) உள்ளார். இவர் புகழ்பெற்ற தடகள வீராங்கனை . பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார். இந்தியா சார்பில் ஆசியப்போட்டிகளில் தங்கம் வென்றவர். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர். கோழிக்கோடு அருகேயுள்ள பயோலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் உஷா. இதனால், பயோலி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயரும் கொண்டவர். இவர், தனது பயிற்சியாளரான ஸ்ரீனிவாசன் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகன் உண்டு. அவர் பெயர் விக்னேஷ் உஜ்வால். இதுவரை, தனது மகனை வெளியுலகத்துக்கு பி.டி.உஷா அறிமுகப்படுத்தியதே இல்லை. அவரும் மீடியாக்களின் முகத்தை காட்டியதே இல்லை.
முதன்முறையாக விக்னேஷ் உஜ்வால் பற்றி தற்போது செய்திகளில் அடிபடுகிறது. அதற்கு காரணம் அவரது திருமணம். கடந்த 25ம் தேதி விக்னேஷ் உஜ்வால், கிருஷ்ணா என்பவரை கொச்சியில் திருமணம் செய்தார். அப்போதுதான், பி.டி.உஷாவின் மகனுக்கு திருமணம் என்று மீடியாக்களில் செய்தி வெளியானது. தற்போது, விக்னேஷ் தனது தாயார் பி.டி. உஷா நடத்தி வரும் தடகள அகாடமியை நிர்வகித்து வருகிறார். அடிப்படையில் இவர் ஒரு டாக்டர். கடந்த 2017ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு, விளையாட்டு துறை மருந்துகள் பிரிவிலும் டிப்ளமோ பெற்றார். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தடகளத்தில் பல முறை பதக்கங்கள் பெற்றுள்ளார். கால்பந்து அணிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால், தொழில்முறையாக அவர் தடகளத்தையோ அல்லது வேறு விளையாட்டையோ தேர்வு செய்யவில்லை.
தனது மகன் பற்றி பி.டி. உஷா கூறுகையில், விக்னேஷ் பிறந்த 7 மாதங்களில் நான் மீண்டும் தடகளத்துக்கு திரும்பிவிட்டேன். எனது, கணவர்தான் அவனை பார்த்துக் கொண்டார். எனது புகழ் வெளிச்சத்தில் அவன் வாழ விரும்பவில்லை. நானும் எந்த விஷயத்தையும் எனது மகன்மீது திணித்ததும் இல்லை. என்னை பின்பற்றி விளையாட்டு வீரராகவும் மாறவில்லை. அவனுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து வாழ்கிறான். தற்போது, இல்லற வாழ்க்கையில் அடியெடுத்தும் வைத்துள்ளான் ‘ என்கிறார்.



Leave a Reply