விருதுநகர் வெடிவிபத்து அச்சத்தில் 200 பட்டாசு ஆலைகள் மூடல் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு!

Spread the love

இந்தியாவின் பட்டாசுத் தலைநகரமாகக் கருதப்படும் சிவகாசி, நாடு முழுக்க தேவையான 90% பட்டாசுகளை உற்பத்தி செய்து வருகிறது. இங்கு இயங்கி வரும் சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக விபத்துகள் அதிகரித்து வருவது இந்தத் துறையின் நிலைப்பாதுகாப்பையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது.

2025ஆம் ஆண்டில், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 14 வெடிவிபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 30 பேர் உயிரிழந்தும், 26 பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலைமையால் ஆலைகள் மீது கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டதுடன், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அச்சத்தால், சிவகாசி, வெம்பக்கோட்டை, நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் தங்களாகவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக முடக்கத்தின் விளைவாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரும் பொருளாதார சிக்கல்களில் சிக்கி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை விடுத்து, இனி ஒரு விபத்துகூட நிகழக்கூடாது என்று உறுதியாக தெரிவித்துள்ளது. அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய 15 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் இன்று முதல் மாவட்டம் முழுவதும் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளன