விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அச்சம் – திருமாவளவன் குற்றச்சாட்டு

tholthirumavalavan
Spread the love

கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறை அஞ்சுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை என்று குற்றம்சாட்ட முயற்சிக்கிறார் விஜய். உயிரிழப்பு குறித்து துளியளவு வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது பழி சுமத்துவது, அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியுள்ளார் என்பதையே காட்டுகிறது. இத்தகைய சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கினால் எதிர்காலம் கவலைக்குரியது” என்றார்.

“இந்த விவகாரத்தில் காவல்துறை காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யும் துணிவு இருக்கிறதே, விஜய்க்கு இல்லையா? செயல் திட்டங்களை வகுத்த அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? தமிழக அரசு, காவல்துறை அச்சப்படுகிறதா? உயிரிழப்புக்கு காரணமானவர்களில் விஜயும் ஒருவர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யத் தயக்கப்படுவது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

அதே சமயம், விஜயின் அரசியல் பாஜக ஆட்டத்தில் ஒன்றாக உள்ளது என்றும், “நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர் பாஜகவால் அனுப்பப்பட்டவர்கள். விஜய், ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்குகிறார். அவரின் அரசியல் திமுக வெறுப்பில் மட்டுமே அடிப்படையாகிறது. கருத்தியல் சார்ந்த அரசியலல்ல. அஞ்சலை அம்மாள், காமராஜர், அண்ணா, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றி ஒருமுறையாவது பேசியிருக்கிறாரா? அவரது உரைகள் வெறும் உணர்ச்சி, ஆத்திரம் தூண்டும் பேச்சுகளே” என்றார்.

மேலும், “குறைந்தபட்ச இரக்க உணர்வும் இல்லாமல் நடந்துகொள்கிறார் விஜய். சிதம்பர விபத்தில் நான் கதறி அழுததை மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், உயிரிழந்தவர்களை தூக்கிச் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் கூட விஜய் பாடிக்கொண்டிருந்தார். தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என திருமாவளவன் வலியுறுத்தினார்.