வாரணாசியில் வாக்காளர் பட்டியல் மோசடி? ஒரே தந்தை பெயரில் 50 பேர் – மோடியின் வெற்றிக்கு சிக்கல் உருவாக்கும் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதி. இந்நிலையில், அந்த தொகுதியில் பெரும் வாக்காளர் பட்டியல் மோசடி நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி புதிய குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆகஸ்ட் 7-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார். அதில், வாரணாசி நகரின் காஷ்மீரிகஞ்ச் 51வது வார்டில், “ராம்கமல் தாஸ்” என்பவரின் மகன்களாக 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
அதிகம் கவன ஈர்த்ததாவது – இவர்கள் சிலர் 72 வயது மற்றும் சிலர் 28 வயது என வயது வேறுபாடுகள் இருந்தும், ஒரே தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது.

காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படங்களிலும் பட்டியலிலும், B 24/19 என்ற முகவரியில் வசிக்கிறவர்களாக இவர்கள் இருக்க, அந்த முகவரியில் “ராம் ஜானகி மட கோவில்” என்பது மட்டுமே இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கோவில் ஒரு குருகுல ஆசிரமமாக செயல்பட்டு வருவதாகவும், குருவை தந்தையாகக் கருதும் சீடர்கள் இருப்பதால், அது ஒரு ஆன்மீக நடைமுறையென கோவிலின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தேர்தல் மோசடியா, அல்லது ஆன்மீக மரபுக் கலப்பா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனை தாங்கள் “வாக்குத் திருட்டு” எனக் கண்டித்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ள காங்கிரஸ், இது மோடியின் வெற்றியை சந்தேகத்திற்குள்ளாக்கும் முக்கிய ஆதாரம் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்யை 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.