வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் கருத்து!

Spread the love

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகளைத் தளத்தில் ஆய்வு செய்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊடகவியலாளர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.

அவர் தெரிவித்ததாவது:
வருகிற நவம்பர் 3ம் தேதி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அடுத்த நாள் (நவம்பர் 4) சுமார் 15,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான மேடை அமைப்புப் பணிகளை இன்று ஆய்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:
“மழைக்காலங்களில் அதிகமான நீர் கடலுக்குச் செல்கிறது. எனவே, தமிழக ஆறுகளை புனரமைக்கவும், பூகோல அடிப்படையில் அது சாத்தியமா என ஆய்வு செய்து வருகிறோம். நிதி வசதி இருந்தால் அதை நடைமுறைப்படுத்துவோம்,” என்றார்.

அத்துடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து அவர் கவலை வெளியிட்டார்.
“வடமாநில தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்ற தகவல் உள்ளது. இது ஆபத்தானது. ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருந்தால், அவர்களை நீக்கி புதிய பெயர்கள் சேர்த்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதுவே பிரச்சனை. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களித்து வரும் மக்களின் பெயரை நீக்கிவிடுகிறார்கள்.
இதற்கு எவ்விதமான ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்வோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.