கடந்த ஜூன் 4 ஆம் தேதியன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது அவர் ஒரு தொகுதியை கைவிட வேண்டியது இருந்தது. இப்போது, ரேபரேலி தொகுதியை ராகுல் டிக் செய்ய வயநாட்டுக்கு இடை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வயநாட்டில் போட்டியிட பிரியங்கா காந்தி நேற்று மனுதாக்கல் செய்தார். அவருக்கு 12 கோடி மதிப்பு சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார்.
வயநாட்டில் ஏராளமான தமிழ் மக்களும் வசிக்கின்றனர். எனவே, வயநாட்டில் சென்னையை சேர்ந்த சீக்கிய தமிழ்ப் பெண் ஒருவரும் போட்டியிடுகிறார். என்ன? சீக்கிய தமிழ்ப் பெண்ணா? என்கிற கேள்வி இங்கே எழுகிறதல்லவா? விஷயத்துக்கு வருவோம்.
கடந்த 1952 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் சீதா என்பவர் தமிழ் பெற்றோருக்கு பிறந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சீதா இளம் வயதில் இருந்தே சாதியக் கொடுமைகளை சந்தித்து வந்தார். பள்ளி படிப்புக்கு பிறகு, சென்னைக்கு வந்த அவர் கம்ப்யூட்டர் சயின்ஸில் டிப்ளமோ பெற்றார். இவரது, கணவர் ராஜன்சிங்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்தான். இவர், சென்னை மாநகர அரசு பேருந்தில் கண்டக்டராக பணி புரிந்தார். இருவரும் பெரியார் மீது கொண்ட பற்றினால் கன்சிராம் காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர். பின்னர், அந்த கட்சியின் தலைவரான மாயாவதி பெரியாரை ‘மகா புருஷ் அதாவது வரலாற்று தலைவர் என்கிற அந்தஸ்த்தில் இருந்து நீக்கியதால் பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு இருவருமே விலகி விட்டனர். ஜாதிகளற்ற வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதுதான் இருவருக்கு ஆசை.
இதற்கிடையே, பகுஜன் திராவிட பார்ட்டி என்ற கட்சியை உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜீவன்சிங் என்பவர் நடத்தி வந்தார். தூத்துக்குடியை சேர்ந்த இவர், பஞ்சாப்பில் கன்சிராம் பிறந்த ஆனந்தப்பூர் ஷாகிப் என்ற குருத்வாராவுக்கு சென்றார். அங்கு, தான் சீக்கிய மதத்தை தழுவ முடிவு செய்திருப்பதாக கூறினார். அங்கிருந்தவர்கள் தாடி வளர்த்து விட்டு 6 மாதம் கழித்து வரும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீவன் சிங் சீக்கிய மதத்தை தழுவி கொண்டார். தற்போது, தாடி வளர்த்து டர்பன் கட்டி சீக்கியர்கள் போவே இவர் வாழ்கிறார்.
ஜீவன்சிங்கின் பெற்றோர் இந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். ஜாதிய கொடுமையால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர். ஆனால், அங்கும் சாதிய கொடுமைகள் இருக்க தற்போது சீக்கிய மதத்தை ஜீவன்சிங் தழுவியுள்ளார். சீக்கிய மதத்தில்தான் சாதியை ஒழிக்கும் தத்துவம் இருப்பதை கண்டதாக ஜீவன்சிங் கூறுகிறார். தற்போது, தூத்துக்குடியிலுள்ள கோரம்பள்ளத்தில் சின்ன குருத்வாரா ஏற்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் 25 தமிழ் சீக்கியர்கள் அங்கு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கமானது. ஜீவன் சிங்கின் அறிமுகம் சீதா கவுர் , ராஜன் சிங் தம்பதிக்கு கிடைத்தது. தொடர்ந்து, இவர்களும் சீக்கிய மதத்துக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மாறியுள்ளனர்.
இப்போது, சீதா என்பவர் சீதா கவுர் ஆக மாறி விட்டார். தற்போது, பகுஜன் திராவிட கட்சியில் சேர்ந்து முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாபிகளின் குருத்வாராவில் எப்போதும் உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கும். அதே போலவே, இவர்களும் நாட்டில் எந்த பகுதியில் பேரிடர் ஏற்பட்டாலும் அங்கு உணவு பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுடன் ஆஜராகி விடுவார்கள். சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போதும், அங்கு சென்று மீட்புப்பணியில் சீதா கவுர், ஜீவன் சிங் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
தற்போது, வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து தமிழ் சீக்கிய பெண்ணான சீதா கவுரும் போட்டியிடுகிறார். பஞ்சாபி பெண் போலவே டர்பன் கட்டி பொது நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்கிறார். இவர், தேர்தலில் போட்டியிடுவது புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே, தென்காசி தொகுதியில் சீதா கவுர் போட்டியிட்டுள்ளார். தற்போது, 52 வயதான சீதா கவுர் இரு குழந்தைகளும் தாய் ஆவார். தனது அலுவலகத்துக்கு வரும் பலரும் தனது உடை அலங்காரத்தை பார்த்து வியந்து போவார்கள் என்றும் தனது கதையை கேட்டதும் அவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் என்று சீதா கவுர் கூறுகிறார். பிரியங்கா காந்தி பற்றி கேட்டால், அவரை பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தனக்கு எதுவும் தெரியாது , ஆனால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே அவரை எதிர்த்து போட்டியிடுவதாக சீதா கவுர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் திராவிட பார்ட்டி கட்சி இந்தியாவில் 14 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து மாநில தலைவர்களையும் வயநாட்டுக்கு வரும்படி ஜீவன் சிங் உத்தரவிட்டுள்ளார். இவர்கள், அனைவரும் சீதா கவுரின் வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்த கட்சியின் தேசியத் தலைவரான ஜீவன் சிங் கூறுகிறார்.
Leave a Reply