,

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்…

modi
Spread the love

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை) நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்ப்பதற்காக விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு புறப்பட்டார். வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அவர் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவை அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும் நடந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெருக்கமாக ஆய்வு செய்தார்.