சினிமா, தகவல் தொடர்பு என்று எடுத்துக் கொண்டால் வடகொரியாவில் யாரும் வெளிநாட்டு படங்களை பார்க்க கூடாது. அரசே தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒன்றை நடத்துகிறது.
இதில், காலையில் அந்த நாட்டு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். அரசின் அறிவிப்புகள், சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னை போற்றும் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும். வெள்ளத்தில் சென்று கிம் ஜாங் மக்களை மீட்பது போன்ற குறும்படங்கள் எல்லாம் ஒளிபரப்பாகும். இதுதான், வடகொரிய தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களின் நிகழ்ச்சிகளாக இருக்கும். மக்களுக்கு மனம் ஏற்றுக் கொள்ளுமா? வேறு ஏதாவது புதியதாக பார்க்கத்தானே ஆசைப்படுவார்கள். ஆனால், அப்படி ஆசைப்பட்டால் உங்கள் உயிர் மிஞ்சாது என்பதே உண்மை.
கடந்த 2022 ஆண்டு தென்கொரியாவின் கே டிராமா நிகழ்ச்சியை பார்த்த 16 வயதே நிரம்பிய இளைஞர்கள் சிலர் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன்னால் கைவிலங்குடன் முட்டங்கால் போட்டு அமர வைக்கப்பட்டனர். அதில், இரு சிறுவர்களுக்கு 12 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இதே ஆண்டில் 70 தென்கொரிய பாடல்களை கேட்டதுடன் 3 தென்கொரிய படங்களை பார்த்ததற்காக இளைஞர் ஒருவர் பொது வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இவ்வளவு கெடுபிடிக்கிடையேயும் மக்கள் கள்ளத்தனமாக தென்கொரிய படங்களை பிளாக்கில் வாங்கி பார்க்கத்தான் செய்கிறார்கள். அதாவது 1990 களில் நம்ம ஊரில் செக்ஸ் படங்களை வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் பார்ப்பார்கள் அல்லவா? அதே போலவே வட கொரிய மக்கள் வெளிநாட்டு படங்களை வீட்டு ஜன்னல், கதவுகளை அடைத்து விட்டு குறைந்த சவுண்ட் வைத்து பார்ப்பார்கள். இதற்கு, கள்ளத்தனமாக அந்த நாட்டில் டிவிடியும் விற்கப்படுகிறது.
தகவல் தெரிந்து விட்டால், முதலில் போலீஸ் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிடும். உடனடியாக சுற்றி வளைத்து விடுவார்கள். மின்சாரம் இல்லாததால், வீட்டில் இருப்பவர்கள் டெக்கில் இருந்து டிவிடியை வெளியே எடுக்க முடியாது. போலீசார் டிவிடியை கைப்பற்றி விடுவார்கள்.அப்புறம் அவ்வளவுதான். இன்டர்நெட் வசதி நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இந்த நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக பயன்படுத்த வேண்டுமென்றால் முறையாக அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். வட கொரிய அரசு, அந்த நாட்டு மக்களுக்கு என்றே தனியாக இன்டர்நெட்டை உருவாக்கியுள்ளது. அதன் பெயர் இன்ட்ராநெட். அதில், அரசு அனுமதித்த வெப்சைட்கள் மட்டுமே பார்க்க முடியும். இதன் விலை அதிகமென்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும். செல்போனில் வெளிநாட்டுக்கு போன் செய்து விட முடியாது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் உங்கள் செல்போனில் இருந்து ஸ்கிரீன் ஷாட்டுகள் எடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். எந்த ஆப் கூடவும் இருக்காது. பேஸ்புக், எக்ஸ் , நெட்பிளிக்ஸ் போன்ற தளங்கள் இங்கு முற்றிலும் தடை செய்யப்பட்டவை. எத்தகையை கொடுமையான வாழ்க்கையை இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து பாருங்கள்!
பைபிள் விநியோகித்தால் வடகொரியாவில் என்ன நடக்கும்? கிறிஸ்தவ மக்களின் நிலை என்ன பார்ப்போம் அடுத்த வாரம்

Leave a Reply