வங்காளதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. கல்வி துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இத்திட்டத்துக்கு வங்காளதேச இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது “இஸ்லாமிய மதப் பண்பாட்டிற்கு விரோதமானது” எனவும், “குழந்தைகளின் மத நம்பிக்கைகளை பாதிக்கும்” எனவும் கூறி அரசை கண்டித்தன. திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தன.
இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, சமூக ஒற்றுமைக்காகவும் நிலைமை சீராக இருக்கவும், தொடக்கப்பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
இது குறித்து வங்காளதேச தொடக்க மற்றும் வெகுஜன கல்வி துறை அதிகாரி மசூத் அக்தர் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.



Leave a Reply