,

வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

college student
Spread the love

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பெல்லியப்பா நகர்  வள்ளலார் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஈஷா அத்விதா (14) மற்றும் காவியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ஈஷா அத்விதா சுமைதாங்கி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சன்பீம் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஈஷா அத்விதா வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென, ஈஷா அத்விதா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக மயங்கி விழுந்த மாணவிக்கு முதலுதவி செய்த பிறகு, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு மேல்விஷாரம் பகுதியில் உள்ள அப்போலோ தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மாணவியின் இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மருத்துவமனைக்கு வந்த அவருடைய தந்தை உடலை எடுத்துக்கொண்டு வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு எடுத்துச் சென்று​ள்ளார். இறுதி சடங்கு ஏற்பாடு செய்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு உடலில் இதய குறைபாடு காரணமாக இறப்பு ஏற்பட்டதாக பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.